புரட்டாசி மகாளய அமாவாசை: காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடல்

புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி, மோகனூர் காவிரி ஆற்றில் பக்தர்கள் சனிக்கிழமை புனித நீராடி கோயில்களில் வழிபட்டனர்.


புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி, மோகனூர் காவிரி ஆற்றில் பக்தர்கள் சனிக்கிழமை புனித நீராடி கோயில்களில் வழிபட்டனர்.
ஒவ்வோர் ஆண்டும் மாதந்தோறும் வரும் அமாவாசைகளைக் காட்டிலும், தை, ஆடியில் வரும் அமாவாசைகள் சிறப்பு வாய்ந்தவை. அதிலும், புரட்டாசி மாதம் வரும் மாகாளய அமாவாசையை, புனித நாளாகவே பக்தர்கள்கருதுவர்.
இந்த நாளில், கடல், ஆறுகளில் பக்தர்கள் புனித நீராடி அருகில் உள்ள கோயில்களில் சுவாமி வழிபாட்டை மேற்கொள்வர். மேலும், தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பர்.
நிகழாண்டில், புரட்டாசி 2-ஆவது சனிக்கிழமையுடன் மகாளய அமாவாசையும் சேர்ந்து வந்ததால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி கொண்டனர். அதிகாலையிலேயே நீர் நிலைகளில் நீராடி தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். ஆற்றங்கரையையொட்டிய கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. 
குறிப்பாக, மோகனூர் காவிரி ஆற்றிலும், அங்குள்ள அசலதீபேஸ்வரர் கோயிலிலும் பக்தர்கள் சுவாமி வழிபாட்டை மேற்கொண்டனர். இதேபோல், பள்ளிப்பாளையம், குமாரபாளையம், பரமத்தி வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் காவிரி ஆற்றங்கரைகளில் பக்தர்கள் அமாவாசையையொட்டி தர்ப்பணம் கொடுத்தனர்.
பரமத்தி வேலூரில்...
காசிக்கு அடுத்தபடியாக பிரசித்தி பெற்றதாக கூறப்படும் காசி விஸ்வநாதர் ஆலயம், பரமத்தி வேலூர் காவிரிக் கரையில் அமைந்துள்ளது. இங்கு அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், காசியில் தர்ப்பணம் கொடுப்பதற்கு சமம் என்பது ஐதீகம். மேலும், தை அமாவாசை மற்றும் மகாளய அமாவாசைகளில் தங்களின் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது மிகவும்சிறந்ததாகும்.
புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு, சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் பரமத்தி வேலூர் காவிரியாற்றுக்கு சனிக்கிழமை அதிகாலை முதலே வந்திருந்து புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com