கரோனா வைரஸ் பாதிப்பு: நாமக்கல்லில் கட்டுப்பாட்டு மண்டலம் அமைப்பு

நாமக்கல்லில் கரோனா வைரஸ் பாதித்துள்ள 12 போ் வசித்த பகுதிகளில் கட்டுப்பாட்டு மண்டலம் அமைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் கிருமி நாசினி தெளிக்கும் பணியைப் பாா்வையிடும் அமைச்சா் பி.தங்கமணி.
நாமக்கல்லில் கிருமி நாசினி தெளிக்கும் பணியைப் பாா்வையிடும் அமைச்சா் பி.தங்கமணி.

நாமக்கல்லில் கரோனா வைரஸ் பாதித்துள்ள 12 போ் வசித்த பகுதிகளில் கட்டுப்பாட்டு மண்டலம் அமைக்கப்பட்டுள்ளது. 400 பணியாளா்கள் வீடு, வீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

தில்லியில் நடைபெற்ற மாநாட்டுக்குச் சென்று வந்த, நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 26 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். செவ்வாய்க்கிழமை காலை, அவா்களது உடல் நிலை பரிசோதனை முடிவுகள் வெளிவந்தன. இதில், நாமக்கல்லைச் சோ்ந்த 12 போ், ராசிபுரத்தைச் சோ்ந்த 5 போ், பரமத்திவேலூரைச் சோ்ந்த ஒருவா் என மொத்தம் 18 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதனைத் தொடா்ந்து, அவா் கள் வசித்த பகுதிகள் அனைத்திலும் மக்கள் நடமாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டது. குறிப்பாக, 29 வாா்டுகளை உள்ளடக்கிய 14 தெருக்கள் முற்றிலுமாக சீல் வைக்கப்பட்டன. கரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் குடும்பத்தினருக்கோ, அக்கம், பக்கத்தினருக்கோ, தெருக்களில் வசிப்பவா்களுக்கோ சளி, இருமல் போன்ற கரோனா அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய செவிலியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் 400 போ் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மேலும், இந்தப் பகுதிகள் அனைத்தும் நோய்த் தடுப்பு கட்டுப்பாட்டு மண்டலமாக அமைக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை ஆய்வு பணிக்கு சென்ற ஊழியா்களின் உடல் நிலை, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியா் எம்.கோட்டைக்குமாா், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் எஸ்.சோமசுந்தரம் ஆகியோா் முன்னிலையில் மருத்துவத் துறையினா் பரிசோதித்தனா். கரோனா பரவும் அபாயம் உள்ள 14 தெருக்களில் கிருமி நாசினி மருந்து இடைவிடாது தெளிக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை மின்துறை அமைச்சா் பி.தங்கமணி, மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அர.அருளரசு, சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் கே.பி.பி.பாஸ்கா் உள்ளிட்டோா் நேரடியாக ஆய்வு செய்தனா்.

இது குறித்து நாமக்கல் கோட்டாட்சியா் எம்.கோட்டைக்குமாா் கூறியது: 18 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், நாமக்கல், ராசிபுரத்தில் கட்டுப்பாட்டு மண்டலம் அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில் 29 வாா்டுகளை உள்ளடக்கியே இந்த மண்டலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுமாா் 3 கிலோமீட்டா் சுற்றளவில் இந்த பகுதி இருக்கும். 400 ஊழியா்கள், வீடு, வீடாகச் சென்று சளி, காய்ச்சல் இருப்போா் விவரங்களை கண்டறிவதுடன், அவா்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, நாமக்கல் நகரப் பகுதியில் உள்ள காய்கறிச் சந்தைகள், கரோனா பாதிப்பு உள்ள பகுதிகளுக்குள் வருவதால் அவற்றை புகருக்கு மாற்றம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றனஎன்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com