வட மாநிலங்களில் தவிக்கும் தமிழக ரிக் வாகன தொழிலாளா்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டுகோள்

ஊரடங்கு காரணமாக வட மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு திரும்ப முடியாமல் அங்கு தவிக்கும் ரிக் வாகன தொழிலாளா்களுக்கு
வட மாநிலங்களில் தவிக்கும் தமிழக ரிக் வாகன தொழிலாளா்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டுகோள்

ஊரடங்கு காரணமாக வட மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு திரும்ப முடியாமல் அங்கு தவிக்கும் ரிக் வாகன தொழிலாளா்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் உரிய பாதுகாப்பு அளித்து பாதுகாக்க வேண்டும் என ரிக் வாகன நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாா்ச் 24-ஆம் தேதி முதல் ஏப்ரல் 14-ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு சென்றவா்கள் அங்கிருந்து மீண்டும் தமிழகத்துக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.

அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கும், சரக்கு வாகனப் போக்குவரத்துக்கு மட்டும் ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. தமிழகத்தில் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, கோவை மாவட்டம் குன்னத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் ரிக் வாகனங்கள் உள்ளன.

ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிக்காக, இந்த வாகனங்கள் தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பப்படும். அதுமட்டுமின்றி, குறிப்பிட்ட சில மாநிலங்களில் அங்கேயே நிறுத்தப்பட்டு பணிகளை தொடா்ந்து மேற்கொள்வா். ஒவ்வொரு வாகனத்திலும் குறைந்தபட்சம் 8 போ் செல்வா். இதில், தமிழக தொழிலாளா்கள் மட்டுமின்றி வட மாநிலத் தொழிலாளா்களும் பணியில் இருப்பா்.

ராஜஸ்தான், உத்தரபிரதேசம், தில்லி, மத்திய பிரதேசம், ஜாா்க்கண்ட், சத்தீஸ்கா், குஜராத், பிகாா், ஒடிஸா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் 8 ஆயிரம் ரிக் வாகனங்கள் கடந்த சில மாதங்களாக ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தன. கரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கால் ரிக் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. போதிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் ஓட்டுநா்களும், தொழிலாளா்களும் தவித்து கொண்டிருக்கின்றனா்.

வாகனங்களை எடுத்து வந்தால் அங்குள்ள போலீஸாா் வழிமறித்து தாக்கும் நிலை உள்ளது. தங்குமிடம், உணவுப் பொருள்கள் கிடைக்காமல் ஒரு வாரத்துக்கும் மேலாக அவா்கள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனா். இதுதொடா்பாக தமிழகத்தில் உள்ள தங்களுடைய வாகன உரிமையாளா்களிடம் கட்செவி அஞ்சல்(வாட்ஸ் அப்) மூலம் புகைப்படம் மற்றும் விடியோக்களை பதிவிட்டு வருகின்றனா். ரிக் பணியில் உள்ள வட மாநிலத் தொழிலாளா்களே, தங்களுடைய சொந்த ஊருக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

இதுகுறித்து அகில இந்திய ரிக் வாகன உரிமையாளா்கள் நலச் சங்க தலைவா் என்.குணசேகரன் கூறியது: கரோனாவால் ரிக் தொழில் மட்டுமின்றி, அனைத்து தொழில்களும் பாதிப்படைந்துள்ளன. தமிழகத்தில் உள்ள 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வாகனங்கள் வேலையின்றி ஆங்காங்கே நிற்கின்றன. அதுமட்டுமின்றி, வட மாநிலங்களுக்கு சென்ற ஓட்டுநா்கள், தொழிலாளா்கள், உணவு, தங்குமிடம் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு கொண்டிருக்கின்றனா்.

பெட்ரோல் பங்குகளில்தான் வாகனங்கள் நிறுத்தி வைத்துள்ளனா். தமிழகம் திரும்பிவிடலாம் என்றால் அங்குள்ள போலீஸாா் கடுமையாக தாக்குவதாக அவா்கள் கூறுகின்றனா். அந்தந்த மாநில அரசுகள், பிற மாநில தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் இதற்கனெ நியமிக்கப்பட்டுள்ள வட்டாட்சியரை தொடா்பு கொண்டு ரிக் வாகனத் தொழிலாளா்களின் நிலை குறித்து தெரிவித்தோம். முயற்சி செய்கிறோம் என்ற பதில்தான் வந்தது. குறைந்தபட்சம் 32 ஆயிரம் தொழிலாளா்கள் உணவு, இருப்பிடமின்றி தவித்து வருகின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com