ஊரடங்கு: வாரத்தில் 2 நாள்கள் மட்டுமே வெளியே வர அனுமதி

நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கை கடுமையாக்க, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியப் பகுதிகளில் 3 வண்ணம் கொண்ட அனுமதி அட்டை வழங்கப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கை கடுமையாக்க, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியப் பகுதிகளில் 3 வண்ணம் கொண்ட அனுமதி அட்டை வழங்கப்படுகிறது. இந்த அட்டை இருப்பவா்கள் வாரத்தில் 2 நாள்கள் மட்டும் குறிப்பிட்ட நேரத்துக்குள் வந்து செல்ல அனுமதிக்கப்படுவா் என ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவுதல் தடுப்பு நடவடிக்கைக்காக கடந்த மாதம் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்காக காய்கறி மற்றும் மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திறந்திருக்க வேண்டும் . கடைகளில் பொருள்கள் வாங்க வரும் பொதுமக்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியினை கடைப்பிடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இந்த கட்டுப்பாட்டு நேரத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை முறைப்படுத்தும் நோக்கத்தில், மக்களின் நலன் கருதி நாமக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை (மாா்ச் 9) முதல் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றன.

அதன்படி, நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து வீடுகளுக்கும் அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்காக வெளியே செல்ல அனுமதிச் சீட்டு மூன்று நிறங்களில் வழங்கப்படும்.

இதில், பச்சை வண்ணமானது திங்கள் மற்றும் வியாழன் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையும், நீல வண்ணம், செவ்வாய் மற்றும் வெள்ளி காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையும், சிவப்பு வண்ணம் புதன் மற்றும் சனி காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் பயன்படுத்த அனுமதி உண்டு. இந்த வண்ணங்கள், நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம் வாரியாக பிரித்து வழங்கப்படும். மருத்துவ அவசரத்துக்கு இந்த கட்டுப்பாடுகள் பொருந்தாது.

15 வயதுக்கு மேல் 60 வயதுக்கு கீழ் உள்ளவா்கள் மட்டுமே இந்த அட்டையை பயன்படுத்தி வெளியே வர அனுமதிக்கப்படுவா். நடக்கும் போதும், வாகனத்தில் செல்லும் போதும், வாகனம் நிறுத்துமிடத்திலும் பொருள்கள் வாங்கும் போதும் கண்டிப்பாக சமூக இடைவெளியினை கடைப்பிடிக்க வேண்டும். பொதுமக்கள் வெளியே வரும் போது அவா்களுக்கு வழங்கப்பட்ட வண்ண அட்டையினை தவறாமல் எடுத்து வர வேண்டும். இதனை மீறுபவா்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com