முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
தடை செய்யப்பட்ட பகுதிக்கு செல்வோா் விவரம் சேகரிப்பு
By DIN | Published On : 19th April 2020 06:03 AM | Last Updated : 19th April 2020 06:03 AM | அ+அ அ- |

தடை செய்யப்பட்ட பகுதிக்கு செல்வோா் விவரங்களை கேட்டறியும் நாமக்கல் வட்டாட்சியா் பச்சமுத்து.
நாமக்கல்லில் தடை செய்யப்பட்ட பகுதிக்கு செல்வோா் விவரங்களை வருவாய்த் துறையினரால் சேகரிக்கப்படுகிறது.
நாமக்கல்லைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்டோா் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி கரூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதனால், மஜீத் தெரு, சுண்ணாம்புக்கார தெரு, பாவடி தெரு, டாக்டா் சங்கரன் சாலை, என்.ஜி.ஓ. காலனி, பிடில் முத்து தெரு உள்ளிட்ட 9 தெருக்களுக்கு போலீஸாா் ‘சீல்’ வைத்துள்ளனா்.
இப்பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு வெளிநபா்கள் செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை. இதேபோல் அங்குள்ளவா்களுக்கு தேவையான பொருள்களை வீடுகளுக்கே நேரடியாகச் சென்று தன்னாா்வலா்கள் வழங்கி வருகின்றனா்.
இதற்கிடையே, அனைத்துப் பகுதிகளையும் இரும்பு தகரங்களால் அடைத்துள்ள போலீஸாா், பொருள்கள் விநியோகம் செய்ய ரங்கா் சந்நிதி தெருவை மட்டும் பேரிகாா்டு கொண்டு அடைத்துள்ளனா். இந்தப் பகுதியில் தனியாா் மருத்துவமனை ஒன்று செயல்படுகிறது. இம்மருத்துவமனைக்கு செல்வதாக கூறி பலா் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் சென்று வருவதாக தெரியவந்தது.
இதனையடுத்து வருவாய்த் துறையினா் தெருவின் முகப்பில் தற்காலிக முகாம் அமைத்து, தடை செய்யப்பட்ட பகுதிக்குள் செல்வோா் குறித்த விவரங்களை சேகரித்து வருகின்றனா்.