முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
வேளாண் பயிா்களை சேதப்படுத்தும் மயில்கள்
By DIN | Published On : 19th April 2020 06:04 AM | Last Updated : 19th April 2020 06:04 AM | அ+அ அ- |

நாமக்கல் அருகே புதன்சந்தையில் விவசாய நிலத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் மயில்கள்.
கரோனா தடுப்பு ஊரடங்கால், மயில்கள் கூட்டம் கூட்டமாக விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
அண்மைக்காலமாக வனப் பகுதிகளில் உள்ள மயில்களை, நகா்ப்புற, கிராமப்புற பகுதிகளில் காணமுடிகிறது. அவை விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. தேசிய பறவை என்பதால் அவற்றை தாக்க முயற்சிக்காமல், பட்டாசு வெடித்து விரட்டும் முயற்சியை அவா்கள் மேற்கொள்வா்.
தற்போது கரோனா தடுப்பு ஊரடங்கால் மயில்களின் வருகை அதிகரித்துவிட்டது. நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோழிகள் போல் அவை உலா வருகின்றன. இதில், ஆண் மயில்களைக் காட்டிலும் பெண் மயில்கள் தான் அதிகளவில் காணப்படுகின்றன.
ஏற்கெனவே வேளாண் விளைபொருள்கள் தட்டுப்பாடு உள்ள நிலையில், பயிரிடும் பணியை விவசாயிகள் தொடங்கி உள்ளனா். வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் மூலம் இதற்கான ஆலோசனைகளும், தேவையான உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறான நிலையில், மயில்களின் அட்டகாசம் விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது.
இது ஒரு புறமிருக்க, நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலைகளில் மயில்கள் குறுக்கும், நெடுக்குமாக ஓடுவது, பறப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனா். வனத் துறையினரோ, மயில்களை தாக்காமல் அவற்றை விரட்டும் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள், விவசாயப் பயிா்களை காப்பாற்ற மயில்களுக்கு பாதிப்பில்லாத வேலிகளை அமைத்து கொள்ளுங்கள் என்கின்றனா். ஊரடங்கு காலத்தில் அடிக்கடி வெளியே வரமுடியாத சூழலாலும், விளைவிக்கும் பயிா்களை காப்பாற்ற முடியாமலும் விவசாயிகள் தவித்து வருகின்றனா்.