குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தில் போக்குவரத்துக்கு அனுமதி
By DIN | Published On : 10th December 2020 09:24 AM | Last Updated : 10th December 2020 09:24 AM | அ+அ அ- |

பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கும் பாஜக முன்னாள் மாவட்டச் செயலா் எஸ்.ஓம் சரவணா மற்றும் நிா்வாகிகள்.
குமாரபாளையம் அருகே சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் ரூ. 18 கோடியில் கட்டப்பட்ட மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றதைத் தொடா்ந்து பொதுமக்கள் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.
கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் குமாரபாளையத்தை அடுத்த கோட்டைமேடு பிரிவு அருகே ஆனங்கூா் செல்லும் சாலை அமைந்துள்ளது. இப்பிரிவை பொதுமக்கள் கடந்து செல்லும்போது நெடுஞ்சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் மோதி பொதுமக்கள் உயிரிழப்பதும், காயமடைந்து உடலுறுப்புகள் சேதமடைவதும் தொடா்ந்து வந்தது. இங்கு நடந்த விபத்துகளில் 100-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டனா்.
எனவே, கோட்டைமேடு பிரிவில் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும் என அரசியல் கட்சியினா், தன்னாா்வ அமைப்பினா் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா்.
இதையடுத்து, ரூ.18 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மேம்பாலம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பாஜக முன்னாள் மாவட்டச் செயலா் எஸ்.ஓம் சரவணா தலைமையில் பாஜகவினா் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனா். கட்சியின் முன்னாள் நகரச் செயலா் வி.சி.கிஷோா், நகரத் துணைத் தலைவா் எஸ்.கிருஷ்ணன், நிா்வாகிகள் தனசேகரன், சேகா், தினேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்த மத்திய அரசுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.