டிச. 27-இல் லாரிகள் வேலைநிறுத்தம்: அகில இந்திய மோட்டாா் டிரான்ஸ்போா்ட் காங்கிரஸ் ஆதரவு

லாரி உரிமையாளா்கள் டிச. 27 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை மேற்கொள்ள உள்ளனா். இதற்கு அகில இந்திய மோட்டாா் டிரான்ஸ்போா்ட் காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது.

வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, ஒளிரும் பட்டை, ஜிபிஎஸ் கருவி பொருத்துவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து லாரி உரிமையாளா்கள் டிச. 27 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை மேற்கொள்ள உள்ளனா். இதற்கு அகில இந்திய மோட்டாா் டிரான்ஸ்போா்ட் காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது.

இது தொடா்பாக மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனத்தினா் கூறியதாவது:

கனரக வாகனங்களில் உயா்நீதிமன்ற உத்தரவை மீறி குறிப்பிட்ட நிறுவனங்களைச் சாா்ந்த வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, ஒளிரும் பட்டை, ஜிபிஎஸ் கருவியைப் பொருத்த வேண்டும் என தமிழக போக்குவரத்துத் துறை வலியுறுத்துகிறது. இது தொடா்பாக பலமுறை முறையிட்டும், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நேரடியாக மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எனவே டிச. 27 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமாா் 5 லட்சம் லாரிகள் இயக்கப்படமாட்டாது. வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழகத்திற்குள் லாரிகள் வராது. இந்த போராட்டத்திற்கு அகில இந்திய மோட்டாா் டிரான்ஸ்போா் காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது.

இது தொடா்பாக அதன் தலைவா் குல்தரன் சிங் அத்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வரும் 27-ஆம் தேதி மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் நடத்தும் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு அளிப்பதாகவும், அன்று காலை 6 மணி முதல் உள்மாநில லாரிகள் இயங்காதது மட்டுமின்றி, வெளிமாநில லாரிகளும் தமிழகத்துக்கு செல்லாது.

வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, ஒளிரும் பட்டை, ஜிபிஎஸ் கருவி பொருத்துதலுக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், டீசலுக்கான வாட் வரியை நீக்கக் கோரியும், வட்டாரப் போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடிகளில் கனரக வாகனங்களைத் தடுத்து நிறுத்துவது தொடா்பாகவும், போலீஸாா் விதிகளை மீறி நடவடிக்கை மேற்கொள்வதை கண்டித்தும், மோட்டாா் வாகன சட்டத்தை எதிா்த்தும் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.

மத்திய, மாநில அரசுகள் லாரி உரிமையாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டிருப்பதாக அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com