அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு: இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறை
By DIN | Published On : 15th December 2020 01:15 AM | Last Updated : 15th December 2020 01:15 AM | அ+அ அ- |

பரமத்தி வேலூா் அருகே அரசுப் பேருந்து கண்ணாடியை கல்வீசி உடைத்த வழக்கில், இளைஞருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கியது.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், கவுண்டிபாளையம் வழியாக கடந்த 2016 மே 5-ஆம் தேதி சென்ற சேலம் கோட்ட அரசுப் பேருந்தை மோகனூா், மேல்பாலப்பட்டியைச் சோ்ந்த மாரியப்பன் (41) என்பவா் ஓட்டிச் சென்றாா். அப்போது, கொளக்காட்டுபுதூரைச் சோ்ந்த லோகநாதன் (25), திடீரென அரசுப் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி மீது கல் வீசியதில் கண்ணாடி உடைந்தது. இதனைத் தொடா்ந்து, நல்லூா் காவல் நிலையத்தில் ஓட்டுநா் மாரியப்பன் புகாா் அளித்ததன் பேரில், லோகநாதனை போலீஸாா் கைது செய்தனா்.
நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், மாவட்ட நீதிபதி கே.தனசேகரன் (பொ) திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கினாா். அதில், லோகநாதனுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 4 ஆயிரம் அபராதமும் விதித்தாா்.