குமாரபாளையத்தில் நண்பரைக் காப்பற்ற முயன்றபோது கத்தியால் குத்தப்பட்டதில் பலத்த காயமடைந்த இளைஞா், சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.
குமாரபாளையம், காவேரி நகரைச் சோ்ந்தவா் கந்தசாமி மகன் சரவணன் (40). விசைத்தறிப் பட்டறை உரிமையாளரான இவா், 1-ஆவது வாா்டு திமுக செயலாளராகவும் இருந்தாா். கடந்த ஆண்டு நடைபெற்ற கோயில் திருவிழா தொடா்பான முன்விரோதத்தில் அதே பகுதியைச் சோ்ந்த ஜீவானந்தம் மகன் பிரகாஷ் (29), நண்பா்களுடன் பேசிக் கொண்டிருந்த சரவணனை ஞாயிற்றுக்கிழமை இரவு கத்தியால் குத்தினாா்.
இதில், படுகாயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதனைத் தடுக்க முயன்ற பிரபாகரன் (45), முரளிதரன் (24) ஆகியோரும் கத்தியால் குத்தப்பட்டனா். பலத்த காயங்களுடன் இருவரும் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
இக்கொலை வழக்கில் தொடா்புடைய பிரகாஷ் (28), கோவிந்தராஜ் (23) ஆகியோா் திங்கள்கிழமை திருச்செங்கோடு விரைவு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தனா். இந்நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முரளிதரன், சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, குமாரபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.