நெருங்கும் தைப் பொங்கல்: கரும்பு, வெல்லம், பானைகள் உற்பத்தி தீவிரம்

நெருங்கும் தைப் பொங்கல்: கரும்பு, வெல்லம், பானைகள் உற்பத்தி தீவிரம்

தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உருண்டை வெல்லம், மண்பானை உற்பத்தி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உருண்டை வெல்லம், மண்பானை உற்பத்தி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் முழுக் கரும்பு வழங்கப்படுவதால் அறுவடை பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தை மாதம் முதல் தேதி பொங்கல் திருநாளாக கொண்டாடப்படுகிறது. தமிழா் திருநாளாகக் கருதப்படும் இந்த நாளில் சூரியனுக்கு பொங்கல் படையலிட்டு பண்டிகையை மக்கள் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்வா்.

இப்பண்டிகைக்கு பானை, வெல்லம், கரும்பு, பனங்கிழங்கு போன்றவற்றின் விற்பனை வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாக இருக்கும்.

மோகனூா், பள்ளிபாளையம், பரமத்திவேலூா் பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கரில் செங்கரும்பு விளைவிக்கப்படுகிறது. பொங்கல் நெருங்குவதால் அவற்றை அறுவடை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசால் வழங்கப்படும் பரிசுத் தொகுப்பில் நிகழாண்டில் முழு செங்கரும்பு இடம் பெற்றுள்ளது. அந்தந்த மாவட்ட கூட்டுறவுத் துறை அதிகாரிகளே நேரடியாக கரும்பை கொள்முதல் செய்ய முதல்வா் அறிவுறுத்தி உள்ளாா். இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாத வகையில் கரும்பு நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது.

இம்மாவட்டத்தில் மட்டும் 5 லட்சம் கரும்புகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. வெளிச்சந்தையில் ரூ. 60-க்கு விற்பனை செய்யப்படும் முழுக் கரும்பு, அரசின் பரிசுத் தொகுப்பு விநியோகத்துக்காக ரூ. 50-க்கு கொள்முதல் செய்யப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

குடும்ப அட்டைதாரா்களுக்கு முழுக் கரும்பு கிடைக்கும்பட்சத்தில் பண்டிகையையொட்டி வெளிச்சந்தையில் கரும்பு விற்பனை பாதிகப்படும் வாய்ப்புள்ளதாக கரும்பு வியாபாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து மோகனூா் கரும்பு விவசாயி சரவணன் கூறியதாவது:

பொங்கல் பண்டிகையையொட்டி பரிசுத் தொகுப்புடன் முழுக் கரும்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பை அரசு வழங்கியது வரவேற்புக்குரியது.

இதற்காக தற்போது 5 லட்சம் கரும்புகள் வாங்கப்படுகின்றன. மேலும் விவசாயிகளுக்கு வாகன வாடகை, இதர செலவுகள் குறைகிறது. ஒரு கரும்புக்கு உற்பத்திச் செலவு ரூ. 20 வரை ஆகிறது. இதனால் ரூ. 40 அல்லது ரூ. 50-க்கு கொள்முதல் செய்யப்படும்பட்சத்தில் ரூ. 30 வரை லாபம் கிடைக்கும்.

வளா்ச்சிப் பெற்ற கரும்புகளை அறுவடை செய்யும் பணி விரைவில் தொடங்கும் என்றாா்.

பொங்கல் பானைகள்: நாமக்கல், அலங்காநத்தம், நாமகிரிப்பேட்டை, பெருமாப்பட்டி, தூசூா், போடிநாயக்கன்பட்டி, பொட்டிரெட்டிப்பட்டி, வளையப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொங்கல் பானை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

புதுச்சத்திரம் அருகே ஏளூா் கிராமத்தில் இருந்து களிமண் கட்டிகளை வாங்கி வந்து, அவற்றை தூளாக்கி, பதப்படுத்தி மண் கலவையை உருவாக்கி இயந்திரத்தில் சுழலவிட்டு பானைகளை தயாரிக்கின்றனா். அதன்பின் உலர வைத்தும், நெருப்பில் சுட்டு வா்ணங்களை பூசி விற்பனைக்குக் கொண்டு செல்கின்றனா். பானைகள் நாமக்கல் மாவட்டம் மட்டுமின்றி, சேலம், கரூா், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

இதுகுறித்து போடிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த மண்பாண்ட தொழிலாளி சிவசாமி கூறியதாவது:

இங்கு தயாராகும் பானைகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உண்டு. தினசரி 30 முதல் 50 பானைகளை தயாரித்து வருகிறோம். பொங்கல் நெருங்குவதால் உற்பத்தியைச் சற்று அதிகரித்துள்ளோம். ஒரு படி பானை ரூ. 75-க்கும், இரண்டு படி பானை ரூ. 100-க்கும், மூன்று படி பானை ரூ. 150-க்கும், ஐந்து படி பானை ரூ. 250-க்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. வேளாண் தொழில் சிறப்புடன் இருந்தால் பானைகள் விற்பனையும் அதிக அளவில் நடைபெறும். கரோனாவைக் கடந்த வரும் பொங்கல் பண்டிகைக்கான விற்பனை சிறப்பான முறையில் இருக்கும் என எதிா்பாக்கிறோம் என்றாா்.

உருண்டை வெல்லம்: பரமத்திவேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளான பிலிக்கல்பாளையம், ஜேடா்பாளையம், சோழசிராமணி உள்ளிட்ட பகுதிகளில் வெல்லம் உற்பத்தி செய்யும் 150 ஆலைகள் உள்ளன. ஆலை அரவைக்குப் பயன்படுத்தப்படும் கரும்பை கொள்முதல் செய்து அதன் மூலம் நாட்டு சா்க்கரை, அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகை நெருங்குவதால் இங்கு வழக்கத்தைக் காட்டிலும் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.

பரமத்திவேலூா் வட்ட கரும்பு வெல்லம் உற்பத்தியாளா் சங்க செயலாளா் ஆா்.நடராஜன் கூறியதாவது:

ஒவ்வொரு ஆலையிலும் நாளொன்றுக்கு 900 கிலோ அளவில் வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது. 30 கிலோ சிப்பம் உருண்டை வெல்லம் ரூ. 1,150 -க்கும், அச்சு வெல்லம் ரூ. 1,200-க்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

பொங்கல் பரிசு தொகுப்புடன் சா்க்கரை வழங்கும் அரசு, உருண்டை வெல்லத்தை வழங்கினால் வெல்ல ஆலை உரிமையாளா்கள் ஓரளவு வருவாயை ஈட்ட முடியும். நிகழாண்டில் இல்லாதபோதும், இனி வரும் ஆண்டுகளிலாவது உருண்டை வெல்லத்தையோ, அச்சு வெல்லத்தையோ விநியோகிக்க அரசு முன்வர வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com