விபத்தில் இறந்த மூதாட்டி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க திமுக கோரிக்கை
By DIN | Published On : 31st December 2020 08:23 AM | Last Updated : 31st December 2020 08:23 AM | அ+அ அ- |

தோ்தல் பொதுக்கூட்டத்திற்கு வந்தபோது விபத்தில் சிக்கி பலியான மூதாட்டியின் குடும்பத்துக்கு அதிமுக இழப்பீடு வழங்க வேண்டும் என நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை இரவு முதல்வா் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, புதுச்சத்திரம் ஒன்றியம், திருமலைப்பட்டி கிராமத்தில் இருந்து சரக்கு வாகனத்தில் பெண்கள் வந்தனா். முதலைப்பட்டி அருகே வந்தபோது அந்த வாகனம் விபத்துக்குள்ளானதில் பழனியம்மாள் (67) என்ற மூதாட்டி உயிரிழந்தாா்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஒருவா் கோவை மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளாா். 20 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஒருவா் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாா். மேலும் 25-க்கும் மேற்பட்டோா் காயமடைந்து, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இது தொடா்பாக காவல் துறை வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விபத்தில் உயிரிழந்த பழனியம்மாள் குடும்பத்துக்கு அ.தி.மு.க. சாா்பில் ரூ. 50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.