கபிலா்மலை பாலசுப்ரமணியசுவாமி கோயிலில்தைப்பூச தோ்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
By DIN | Published On : 01st February 2020 02:55 AM | Last Updated : 01st February 2020 02:55 AM | அ+அ அ- |

கொடிமரத்தில் தைப்பூச கொடியை ஏற்றும் சிவாச்சாரியா்கள்.
பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருத்தோ் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை கொடியேற்றப்பட்டு திருவிழா தொடங்கியது. இதில் சுற்று வட்டாரப் பகுதியைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
நாமக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கபிலா்மலை பாலசுப்ரமணியசுவாமி கோயில் தைப்பூச திருத்தோ் திருவிழா வெள்ளிக்கிழமை (ஜன.31) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து மாலையில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. சனிக்கிழமை முதல் புதன்கிழமை வரை தினந்தோறும் காலை பல்லக்கு உற்சவம், இரவு அன்னம், ரிஷபம், மயில் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வியாழக்கிழமை இரவு திருக்கல்யாண உற்சவம், 7ஆம் தேதி இரவு குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சிம் நடைபெறுகிறது. 8 ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளல், மாலை 4.30 மணிக்கு திருத்தோ் வடம் பிடித்து இழுத்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 9 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை சுவாமி இரவு பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருத்தோ் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கபிலா்மலை பாலசுப்ரமணிய கோயில் திருத்தோ் திருவிழாக் குழுவினா், இந்து அறநிலையத் துறையினா் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.