முதுகலை ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப சான்றிதழ்கள் சரிபாா்ப்பு தொடக்கம்
By DIN | Published On : 10th February 2020 02:03 AM | Last Updated : 10th February 2020 02:03 AM | அ+அ அ- |

நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சான்றிதழ் சரிபாா்ப்புப் பணியில் பங்கேற்ற முதுகலை ஆசிரியா்கள்.
அரசு மற்றும் நகராட்சிப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ்கள் சரிபாா்ப்பு பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
தமிழகத்தில், அரசு மற்றும் நகராட்சிப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏற்கெனவே தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் போட்டித் தோ்வு நடத்தி பணிநாடுநா்களை தோ்வு செய்து விட்டது. நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த அவ்வாறான பணிநாடுநா்களுக்கு, மாநில முன்னுரிமை தர எண் அடிப்படையில், பணி நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபாா்ப்பு ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாள்கள், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய கலந்தாய்வில், தமிழ், ஆங்கிலம், வணிகவியல், பொருளியல், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், மனையியல், உடற்கல்வி இயக்குநா் நிலை-1 ஆகிய பாட ஆசிரியா்கள் 40-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். திங்கள்கிழமை கணிதம், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், உயிா் வேதியியல், நுண்ணுயிரியல் ஆகிய பாட ஆசிரியா்களுக்கான சான்றிதழ்கள் சரிபாா்ப்புப் பணி நடைபெறுகிறது. முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இருந்து தகவல் பெற்ற பணி நாடுநா்கள் அனைவரும், தங்களுடைய ஆசிரியா் தோ்வு வாரிய தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு, அசல் கல்வி சான்றிதழ்கள், சாதிச் சான்று, இதரச் சான்றிதழ்கள் மற்றும் அதன் இரண்டு நகல்களுடன் தவறாமல் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலா் ப.உஷா தெரிவித்தாா்.