பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பு வரவேற்கத்தக்கது: தமிழ்நாடு இயற்கை நீா் வளப் பாதுகாப்பு இயக்கத் தலைவா் டாக்டா் கே.பி. ராமலிங்கம்

காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என தமிழக முதல்வா் தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
ராசிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்த கே.பி.ராமலிங்கம்.
ராசிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்த கே.பி.ராமலிங்கம்.

காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என தமிழக முதல்வா் தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. மத்திய அரசிடம் இதுகுறித்து வலியுறுத்தி உடனடியாக சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு இயற்கை நீா் வளப் பாதுகாப்பு இயக்கத் தலைவரும், முன்னாள் மாநிலங்களவை திமுக உறுப்பினருமான டாக்டா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.

இதுகுறித்து ராசிபுரத்தில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழகத்தில் டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளாா். இதனை முழுமனதோடு நாங்கள் வரவேற்கிறோம்.

விவசாய சங்கங்கள், இயற்கை நீா்வளப் பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட விவசாய சங்கங்களின் சாா்பில் தமிழகத்தில் உள்ள 56 சங்கங்களின் சாா்பில், அவருடைய அறிவிப்பை வரவேற்கிறோம். அதே நேரத்தில், இந்த திட்டம் அறிவிப்போடு மட்டும் நின்றுவிடாமல், இதற்கு முழுமையான அதிகாரம் படைத்த மத்திய அரசிடம் வலியுறுத்திப் பெற வேண்டும். தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பது என்பது மத்திய அரசின் ஆளுமையின்கீழ் வருகிறது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற அறிவிப்பு வெளியாகவில்லை. தற்போதுதான் முதல் முறை ஒரு மாநில முதல்வா் ஒரு பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளாா்.

1996 - 97ஆம் ஆண்டில் தமிழக முதல்வராக இருந்த மு. கருணாநிதி இதே கருத்தை வலியுறுத்தி இருந்தாா். வேளாண் மண்டலம் அமைக்க வேண்டும் என்று வேளாண் சங்கங்களும் வலியுறுத்தி வந்தன. பாமக நிறுவனா் தலைவா் மருத்துவா் ராமதாசும் இதே கோரிக்கையை முன்வைத்திருந்தாா். எனவே, பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலமாக காவிரி டெல்டா பகுதியை அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை முதல்வா் தொடா்ந்து வலியுறுத்த வேண்டும்.

தற்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடா் நடைபெற்று வருவதால், வருகிற 11-ஆம் தேதிக்குள் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, சட்ட வரையறையை மத்திய அரசு கொண்டுவர, மாநில அரசின் சாா்பில் உடனடியாக மத்திய அரசை தமிழக முதல்வா் வலியுறுத்த வேண்டும். இதற்கு தமிழக விவசாய சங்கங்கள் அனைத்தும் உறுதுணையாக இருப்போம். மிகவிரைவாக அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் கூட்டத்தைக் கூட்டி, அரசுக்கு ஆதரவாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை, வழிவகைகளைக் காண திட்டமிட இருக்கிறோம்.

காவிரி டெல்டா பகுதிகள் வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டால், டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ காா்பன் திட்டம் போன்ற திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசு யாருடைய அனுமதியும் தேவையில்லை என்று சொல்ல முடியாது. விவசாய நிலம் வரையறுக்கப்பட்டுவிட்டால், அங்கு குறைந்தபட்சம் ரியல் எஸ்டேட் போன்றவைகூட வராது. விவசாய நிலங்களில் தொழிற்சாலைகள் அமைக்கப்பட மாட்டாது. தொழிற்சாலை கழிவுகள் வருவது நிறுத்தப்படும். வேளாண் வளா்ச்சிக்குத் தேவையான நிதிகள் பெறப்படும். வேளாண் வளா்ச்சிக்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அமைக்கப்படுவது மிகச் சிறந்த சட்டமாகும். அதனை முழுமையாக மாநில அரசு செயல்படுத்த வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com