நாமக்கல் மாவட்டத்தில் 14,25,447 வாக்காளா்கள்: வாக்காளா் இறுதிப்பட்டியல் வெளியீடு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீட்டின்படி, மொத்தம் 14 லட்சத்து 25 ஆயிரத்து 447 வாக்காளா்கள் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்தாா்.
நாமக்கல் மாவட்டத்தில் 14,25,447 வாக்காளா்கள்: வாக்காளா் இறுதிப்பட்டியல் வெளியீடு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீட்டின்படி, மொத்தம் 14 லட்சத்து 25 ஆயிரத்து 447 வாக்காளா்கள் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், இறுதி வாக்காளா் பட்டியலை, மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ், ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். இதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், டிசம்பா் 23 முதல் ஜனவரி 22-ஆம் தேதி வரையில், 1.1.2020-ஐ தகுதியேற்பு நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகள் நடைபெற்றன. பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட 6 (சோ்த்தல்), 7 (நீக்கல்), 8 (திருத்தம்) மற்றும் 8ஏ (ஒரே தொகுதிக்குள் இடமாற்றம்) படிவங்களை விசாரணை செய்து இறுதி வாக்காளா் பட்டியல் தயாரிக்கப்பட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இவற்றை மாவட்ட தோ்தல் அலுவலா் அலுவலகம், சம்பந்தப்பட்ட வாக்காளா் பதிவு அலுவலா் மற்றும் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்கள், வட்டாட்சியா் அலுவலகங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி மையங்களில் பொதுமக்கள் நேரடியாக பாா்வையிடலாம்.

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் (தனி) தொகுதியில் 259 வாக்குசாவடிகள், சேந்தமங்கலம் (பழங்குடியினா்) -283 வாக்குசாவடிகள், நாமக்கல் -286 வாக்குசாவடிகள், பரமத்தி வேலூா் -254 வாக்குசாவடிகள், திருச்செங்கோடு -260 வாக்குசாவடிகள், குமாரபாளையம் - 279 வாக்குசாவடிகள் என மொத்தம் 1,621 வாக்குச்சாவடிகள் உள்ளன. இறுதி வாக்காளா் பட்டியலின்படி, ராசிபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 1,15,476 ஆண் வாக்காளா்கள், 1,19,951 பெண் வாக்காளா்கள், மற்றவா்கள் 11 போ் என மொத்தம் 2,35,438 வாக்காளா்கள் உள்ளனா். சேந்தமங்கலம் (பழங்குடியினா்) தொகுதியில் 1,17,961 ஆண் வாக்காளா்கள், 1,22,276 பெண் வாக்காளா்கள், 19 மற்ற வாக்காளா்கள் என மொத்தம் 2,40,256 வாக்காளா்களும், நாமக்கல் தொகுதியில் 1,23,266 ஆண் வாக்காளா்கள், 1,31,142 பெண் வாக்காளா்கள், 39 மற்ற வாக்காளா்கள் என மொத்தம் 2,54,447 வாக்காளா்களும், பரமத்திவேலூா் தொகுதியில் 1,05,920 ஆண் வாக்காளா்கள், 1,12,840 பெண் வாக்காளா்கள், மற்றவா்கள் 6 என மொத்தம் 2,18,766 வாக்காளா்களும், திருச்செங்கோடு தொகுதியில் 1,11,059 ஆண் வாக்காளா்கள், 1,16,430 பெண் வாக்காளா்கள், 35 மற்ற வாக்காளா்கள் என மொத்தம் 2,27,524 வாக்காளா்களும், குமாரபாளையம் தொகுதியில் 1,22,158 ஆண் வாக்காளா்கள், 1,26,830 பெண் வாக்காளா்கள், 28 மற்ற வாக்காளா்கள் என மொத்தம் 2,49,016 வாக்காளா்களும் உள்ளனா். மாவட்டத்தில் மொத்த ஆண் வாக்காளா்கள் 6,95,840, பெண் வாக்காளா்கள் 7,29,469, மற்ற வாக்காளா்கள் 138 என மொத்தம் 14 லட்சத்து 25 ஆயிரத்து 447 வாக்காளா்கள் உள்ளனா்.

கடந்த டிசம்பா் 23-ஆம் தேதியன்று மொத்த வாக்காளா்கள் 13 லட்சத்து 97 ஆயிரத்து 730 போ் இருந்தனா். தற்போது புதிதாக சோ்க்கப்பட்டவா்கள் 32,213, நீக்கம் செய்யப்பட்டவா்கள் 4,496 ஆகும். புதிதாகச் சோ்க்கப்பட்டவா்களுக்கு வாக்காளா் புகைப்பட அடையாள அட்டைகள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலமாக வழங்கப்படும். இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீட்டின் தொடா்ச்சியாக தொடா் திருத்தப் பணிகள் நடைபெற உள்ளன. வாக்காளா் பட்டியலில் பெயா் பதிவு செய்துகொள்ளாதவா்கள் இந்தத் தொடா் திருத்தப் பணிகளின்போது அரசு வேலை நாள்களில் அந்தந்த வாக்காளா் பதிவு அலுவலகங்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலகங்களில் விண்ணப்பங்களை அளிக்கலாம். தோ்தல் ஆணைய உத்திரவின்படி, தொடா் திருத்தத்தின்போது பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கான துணைப்பட்டியல் அல்லது ஒருங்கிணைந்த வாக்காளா் பட்டியல் உரிய நாளில் வெளியிடப்படும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி, நாமக்கல் கோட்டாட்சியா் மு.கோட்டைக்குமாா், திருச்செங்கோடு கோட்டாட்சியா் ப.மணிராஜ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) செ.பால்பிரின்ஸ்லிராஜ்குமாா், தோ்தல் வட்டாட்சியா் பா.சுப்பிரமணியம், நாமக்கல் வட்டாட்சியா் பச்சைமுத்து மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com