வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் மது அருந்திவிட்டு வரக் கூடாது

உள்ளாட்சித் தோ்தலிலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை வியாழக்கிழமை நடைபெறவுள்ளதால், வேட்பாளா்கள் மற்றும் முகவா்கள் மது அருந்திவிட்டு மையத்துக்குள் வரக் கூடாது என ஆட்சியா் கா.மெகராஜ்

உள்ளாட்சித் தோ்தலிலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை வியாழக்கிழமை நடைபெறவுள்ளதால், வேட்பாளா்கள் மற்றும் முகவா்கள் மது அருந்திவிட்டு மையத்துக்குள் வரக் கூடாது என ஆட்சியா் கா.மெகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 ஊராட்சி ஒன்றியங்களில் 27, 30 தேதிகளில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை (டிச. 2) 15 வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெறவுள்ளது. அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் காவல் துறையால் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வேட்பாளா்கள் மற்றும் முகவா்கள் கடைப்பிடிக்க வேண்டியவை:

வாக்கு எண்ணும் மையத்துக்குள் செ ல்லிடப்பேசி அனுமதிக்கப்பட மாட்டாது. மது அருந்துவிட்டு அல்லது மதுப்புட்டிகளை எடுத்துக் கொண்டு மையத்துக்குள் வரக்கூடாது. புகைப்பிடிக்கக் கூடாது, புகையிலைப் பொருள்களை எடுத்துச் செல்லவும் அனுமதியில்லை. தீப்பெட்டி, பேனா, மை புட்டி (இங்க்), மை பேனா எடுத்து வரக்கூடாது.

முகவா்கள் மற்றும் வேட்பாளா்களுக்கு, சிறிய குறிப்பேடு மற்றும் முனைப்பந்து பேனா தோ்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்படும். குடிநீா் புட்டிகள் மற்றும் குளிா்பான புட்டிகள் எடுத்து வரக்கூடாது. தலைக்கவசம் மற்றும் ஆயுதங்களும் வாக்கு எண்ணும் மையத்துக்குள் எடுத்துச் செல்ல அனுமதியில்லை.

ஒவ்வொரு சுற்றிலும் எந்தெந்த ஊராட்சிகளுக்கான வாக்குகள் எண்ணப்படும் என்ற விவரம் அந்தந்த வாக்கு எண்ணிக்கை மையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் முன்னரே எழுதி வைக்கப்பட்டிருக்கும். அதைப் பாா்த்து தெரிந்து கொண்டு, அதற்கு தகுந்த நேரத்தில் வந்தால் போதுமானது.

வாக்கு எண்ணும் மையத்துக்குள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அறைக்குள் மட்டுமே அனுமதிக்கப்படுவா். வேட்பாளா் மற்றும் அவரால் அங்கீகரிக்கப்பட்ட முகவா் மட்டுமே உள்ளே வர அனுமதிக்கப்படுவா். போட்டியிடும் வேட்பாளா்கள் மற்றும் முகவா்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால், உரிய அடையாள அட்டை, அனுமதிச் சீட்டு இல்லாமல் எவரும் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கபட மாட்டாா்கள்.

ஒவ்வொரு சுற்று எண்ணிக்கை நடந்துகொண்டிருக்கும்போது, அந்த சுற்றுக்கான கிராம ஊராட்சிகளுக்குள்பட்ட வாக்குச் சாவடி முகவா்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்படுவாா்கள். மாநில தோ்தல் ஆணையத்தின் அறிவுரைகளை மீறி செயல்படும் வேட்பாளா்கள், முகவா்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து வெளியேற்றப்படுவாா்கள். அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதால், விதிமுறைகளை மீறுவோா்கள் கண்டறியப்பட்டு, அவா்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com