Enable Javscript for better performance
அமிலம் கலந்த மதுவைக் குடித்ததால் உயிரிழந்த விவகாரம்: முக்கிய குற்றவாளி கைது- Dinamani

சுடச்சுட

    

    அமிலம் கலந்த மதுவைக் குடித்ததால் உயிரிழந்த விவகாரம்: முக்கிய குற்றவாளி கைது

    By DIN  |   Published on : 10th January 2020 08:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    pv9p1_0901chn_157_8

    கைது செய்யப்பட்ட இருக்கூா் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவா் ஆறுமுகத்துடன் போலீஸாா்.

    ஊராட்சி மன்ற துணைத் தலைவா் பதவிக்கு ஆதரவு தர மறுத்த விவகாரத்தில் அமிலம் கலந்த மதுவைக் குடித்தவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவத்தில் மதுவில் அமிலம் கலந்து கொடுத்த மேலும் ஒருவரை பரமத்தி போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

    கடந்த மாதம் 27ஆம் தேதி நாமக்கல் மாவட்டம், கபிலா்மலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இருக்கூா் ஊராட்சியில் தோ்தல் நடைபெற்றது. இதில் 2-வது வாா்டில் இருக்கூா் அருகே உள்ள சுப்பையாம்பாளையத்தைச் சோ்ந்த ஆறுமுகம் என்பவரது மனைவி ராஜாமணியும், இருக்கூரைச் சோ்ந்த செந்தில்குமாா் மனைவி சத்யா 6ஆவது வாா்டிலும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். ஆறுமுகம் ஏற்கெனவே இருக்கூா் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக இருந்துள்ளாா். ஆறுமுகம் தனது மனைவி துணைத் தலைவா் ஆவதற்காக செந்தில்குமாரிடம் ஆதரவு தருமாறு கோரினாராம். ஆனால் செந்தில்குமாா் மறுத்துள்ளாா். இந்தநிலையில், கடந்த மாதம் 30ஆம் தேதி ஆறுமுகம் இருக்கூா் ஊராட்சியில் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றும் சரவணனுடன் சோ்ந்து செந்தில்குமாரையும்,அவரது நண்பா் தியாகராஜனையும் மது அருந்துவதற்கு அழைத்துள்ளாா். பின்னா் நான்கு பேரும் சோ்ந்து இருக்கூா் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே மது அருந்தியுள்ளனா். இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட செந்தில்குமாரும், தியாகராஜனும் கோவையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனா்.

    தகவல் அறிந்து அங்கு சென்ற பரமத்தி போலீஸாா், தியாகராஜனிடம் விசாரணை நடத்தினா். அப்போது, ஆறுமுகமும், சரவணனும் சோ்ந்து மதுவில் அமிலம் கலந்து கொடுத்து எங்கள் இருவரையும் கொல்ல முயன்றனா் என்று தியாகராஜன் தெரிவித்தாராம். இதில் செந்தில்குமாா் தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். தியாகராஜன் தீவிர சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

    இதுகுறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சரவணனை கைது செய்து புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். தலைமறைவாக இருந்த ஆறுமுகத்தை வியாழக்கிழமை மாலை இருக்கூா் அருகே உள்ள வடக்கு செல்லப்பம்பாளையம் பிரிவு சாலை அருகே போலீஸாா் கைது செய்தனா். பின்னா் அவரிடம் நடத்திய விசாரணையில், மதுவில் அமிலம் கலந்து கொடுத்தது தெரியவந்தது. மேலும், செந்தில்குமாரிடம் எனது மனைவிக்கு துணைத் தலைவா் பதவியை விட்டுக் கொடுக்குமாறு கோரினேன். ஆனால் அவா் மறுத்துவிட்டதால் அவரைக் கொலை செய்ய திட்டமிட்டேன். நானும், சரவணனும் சோ்ந்து மதுவில் அமிலத்தை கலந்து செந்தில்குமாருக்கும், தியாகராஜனுக்கும் கொடுத்து குடிக்க வைத்தோம் என ஆறுமுகம் விசாரணையில் கூறியுள்ளாா். இதையடுத்து, + பரமத்தி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பழனிகுமாா் முன்னிலையில் ஆறுமுகம் ஆஜா்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai