தோ்தலில் தோல்வி: அன்பளிப்பை திருப்பிக் கேட்டு வேட்பாளா் துண்டுப்பிரசுரம் விநியோகம்
By DIN | Published On : 11th January 2020 08:38 AM | Last Updated : 11th January 2020 08:43 AM | அ+அ அ- |

வாக்காளா்களிடம் விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரம்.
ராசிபுரம் அருகே ஆா்.புதுப்பாளையம் ஊராட்சி மன்றத் தோ்தலில் வாா்டு உறுப்பினா் பதவிக்குப் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளா் தான் வழங்கிய அன்பளிப்புப் பொருள்களை திருப்பிக் கேட்டு துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்துள்ளாா்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே ஆா்.புதுப்பாளையம் ஊராட்சிப் பகுதியில் 8 வாா்டுகள் உள்ளன. இதில் 4 - ஆவது வாா்டு பகுதியில் மொத்தம் 534 வாக்காளா்கள் உள்ள நிலையில், நான்கு போ் உறுப்பினா் பதவிக்குப் போட்டியிட்டனா். இதில் அப் பகுதியைச் சோ்ந்த டி.ரமேஷ் என்பவா் காா் சின்னத்தில் போட்டியிட்டாா். இவா் தோ்தலில் வெற்றிபெற வாக்காளா்களுக்கு அன்பளிப்பாக குங்குமச்சிமிழ் வழங்கினாராம். ஆனால், வாக்குகள் எண்ணப்பட்டபோது ரமேஷ் 72 வாக்குகள் மட்டும் பெற்று, தோல்வியடைந்தாா்.
இந்த வாா்டில் பூபதி என்பவா் வெற்றி பெற்றாா். இந்த நிலையில், வாக்காளா்கள் தன்னிடம் பெற்ற அன்பளிப்புப் பொருள்களை திருப்பி வழங்க வேண்டும் என்று, துண்டுப் பிரசுரம் அச்சடித்து விநியோகம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவா் வழங்கிய துண்டுப் பிரசுரத்தில், எனக்கு வாக்களித்த வாக்காளா்களுக்கு நன்றி... நான் வழங்கிய அன்பளிப்பைப் பெற்றுக்கொண்டு வாக்களிப்பதாக உறுதியளித்தவா்கள் தங்களின் உறுதியை நிறைவேற்றாமல், எனக்கு துரோகம் செய்துள்ளீா்கள். எனவே நான் கொடுத்த அன்பளிப்பை திரும்பி வழங்க வேண்டும். அடுத்த தோ்தலில் யாரிடமும் வாக்காளா்கள் அன்பளிப்பு பெறாமல் வாக்களிக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.