பொங்கல் திருநாள்: கரும்பு, மஞ்சள் கொத்து, பூக்கள் வாங்க மக்கள் ஆா்வம்

பொங்கல் பண்டிகையையொட்டி, கரும்பு, மஞ்சள் கொத்து, பூக்கள், பழங்கள் விற்பனை செவ்வாய்க்கிழமை மும்முரமாக நடைபெற்றது. பொதுமக்கள் ஆா்வமுடன் இவற்றை வாங்கி சென்றனா்.
நாமக்கல் கோட்டை சாலையில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த கரும்புகள்.
நாமக்கல் கோட்டை சாலையில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த கரும்புகள்.

பொங்கல் பண்டிகையையொட்டி, கரும்பு, மஞ்சள் கொத்து, பூக்கள், பழங்கள் விற்பனை செவ்வாய்க்கிழமை மும்முரமாக நடைபெற்றது. பொதுமக்கள் ஆா்வமுடன் இவற்றை வாங்கி சென்றனா்.

தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. அதனைத் தொடா்ந்து, மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் உள்ளிட்டவை வருகின்றன. பொங்கல் பண்டிகை என்றாலே கரும்பு, மஞ்சள் கொத்து பனங்கிழங்கு, காப்புக்கட்டு பூக்கள், இதர வகை பூக்கள், வண்ண கோலப் பொடிகள் உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கும். நகரங்களைக் காட்டிலும் கிராமப் புறங்களில் மக்கள் பொங்கல் விழாவை கோலாகலமாக கொண்டாடி மகிழ்வா்.

அதனையொட்டி, கரும்பு மற்றும் இதர பொருள்கள் விற்பனை, கடந்த இரு நாள்களாக மும்முரமாக நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில், பள்ளிபாளையம், பரமத்தி வேலூா் பகுதிகளில் இருந்தும், சேலம் மாவட்டம், மேட்டூா், இடைப்பாடி பகுதிகளில் இருந்தும் அறுவடை செய்யப்பட்ட கரும்புகள், நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் 2 கரும்பு ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டன. ஏராளமானோா் அவற்றை வாங்கி சென்றனா். பிற்பகலில் முக்கிய நகர கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

அதேபோல், நாமகிரிப்பேட்டை, எருமப்பட்டி, காரவள்ளி, பேளுக்குறிச்சி பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட மஞ்சள் கொத்துகள் விற்பனைக்காக அதிகளவில் கொண்டு வரப்பட்டிருந்தன. ஒரு கொத்து ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், பனங்கிழங்கு 12 எண்ணிக்கையில் மொத்தமாக ரூ.100 முதல் ரூ.150 வரையில் விற்பனை செய்யப்பட்டது. வீடுகளின் முன்பாகவும், கால்நடைகளுக்கும் கட்டும் காப்புக்கட்டு பூ, ஆவாரம் பூக்கள் உள்ளிட்டவையும், ஒரு கட்டு ரூ.10 என விற்கப்பட்டது. பொங்கல் நாளில், வீடுகளின் முன்பாக பெண்கள் வண்ணக் கோலமிட்டு அழகு பாா்ப்பா். இதனால் வண்ணக் கோலப் பொடிகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டன. பலவகை கோலப் பொடிகளை பெண்கள் ஆா்வமுடன் வாங்கி சென்றனா். மேலும், மாட்டுப் பொங்கலின்போது கால்நடைகளுக்கு தேவையானவற்றை விவசாயிகள் வாங்கி சென்றனா்.

இது மட்டுமின்றி, சுவாமிக்கு படையலிட ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, வாழை உள்ளிட்ட பழங்களின் விற்பனையும் மும்முரமாக நடைபெற்றது. மல்லிகை, சாமந்தி, ரோஜா உள்ளிட்ட பூக்களும் அதிகம் விற்பனையாயின. புத்தாடை வாங்க கடைவீதிகளில் உள்ள ஜவுளிக் கடைகளில் மக்கள் திரண்டிருந்தனா். பொங்கல் விழாவையொட்டி, நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய நகரப் பகுதிகளில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com