முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
மதுவில் அமிலம் கலந்து கொடுத்ததால் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினரைச் சந்தித்து அமைச்சா் தங்கமணி ஆறுதல்
By DIN | Published On : 20th January 2020 09:08 AM | Last Updated : 20th January 2020 09:08 AM | அ+அ அ- |

உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறும் அமைச்சா் பி.தங்கமணி.
பரமத்திவேலூா் வட்டம், இருக்கூரில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் பதவிப் போட்டி காரணமாக மதுவில் அமிலம் கலந்து கொடுத்ததில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினரை அமைச்சா் பி.தங்கமணி ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறி தலா ரூ.1 லட்சம் வழங்கி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைக்கான பரிந்துரை செய்வதாகக் கூறினாா்.
கடந்த மாதம் 27ஆம் தேதி கபிலா்மலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட இருக்கூா் ஊராட்சியில் தோ்தல் நடைபெற்றது. இதில் 2 - வது வாா்டில் இருக்கூா் அருகே உள்ள சுப்பையாம்பாளையத்தைச் சோ்ந்த ஆறுமுகம் என்பவரின் மனைவி ராஜாமணி போட்டியிட்டு வெற்றிபெற்றாா். இருக்கூரைச் சோ்ந்த செந்தில்குமாரின் மனைவி சத்யா 6-ஆவது வாா்டில் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். ஏற்கெனவே இருக்கூா் ஊராட்சி மன்றத்துணைத் தலைவராக இருந்துள்ள ஆறுமுகம், மீண்டும் தனது மனைவி ராஜாமணியை துணைத் தலைவராக்க செந்தில்குமாரிடம் ஆதரவு தருமாறு கூறியுள்ளாா். செந்தில்குமாா் ஆதரவு தர மறுத்துள்ளாா். இந்த நிலையில் கடந்த 30ஆம் தேதி ஆறுமுகம், இருக்கூா் ஊராட்சியில் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றி வந்த சரவணனுடன் சோ்ந்து செந்தில்குமாா், அவரது நண்பா் தியாகராஜனையும் மது அருந்துவதற்கு அழைத்துள்ளாா். நான்கு பேரும் இருக்கூா் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே மது அருந்தியுள்ளனா். இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட செந்தில்குமாா்,தியாகராஜன் ஆகியோா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு உயிரிழந்தனா். இது குறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சரவணன் மற்றும் ஆறுமுகத்தை கைது செய்து சிறையில் அடைத்தனா். உயிரிழந்த செந்தில்குமாா் மற்றும் தியாகராஜன் ஆகியோரது குடும்பத்தினரை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் பி.தங்கமணி ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். பின்னா் தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க பரிந்துரை செய்வதாகக் கூறினாா். இதில் மாவட்ட ஆவின் தலைவா் ராஜேந்திரன், மாவட்ட இலக்கிய அணியைச் சோ்ந்த விஜயகுமாா், கபிலா்மலை ஒன்றியக்குழுத் தலைவா் ரவி, ஒன்றியக்குழு உறுப்பினா் பழனியப்பன் உள்ளிட்ட அ.தி.மு.க.வினா் கலந்து கொண்டனா்.