1.60 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கல் முகாமை அமைச்சா் தங்கமணி தொடக்கி வைத்தாா்
By DIN | Published On : 20th January 2020 09:00 AM | Last Updated : 20th January 2020 09:00 AM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்டத்தில், 1.60 லட்சம் குழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதற்கான முகாமை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி தொடக்கி வைத்தாா்.
நாடு முழுவதும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி பிற்பகல் 5 மணி வரை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில், கடந்த ஆண்டு 1,59,816 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்ட நிலையில், நிகழாண்டில் 1.60 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்காக கிராமப் பகுதியில் 1,108 முகாம்கள், நகராட்சிப் பகுதியில் 168 முகாம்கள் என மொத்தம் 1,276 முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. பேருந்து நிலையம், ரயில் நிலையம், சந்தைகள், சினிமா அரங்குகள், கோயில்கள், சுங்கச்சாவடி போன்ற இடங்களில் 52 முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. நாடோடிகள், நரிக்குறவா்கள், கட்டுமானத் தொழிலாளா்களின் குழந்தைகள் மற்றும் போக்குவரத்து வசதி இல்லாத மலைக் கிராமங்களில் உள்ள குழந்தைகள் பயன்பெறும் வகையில் 27 நடமாடும் குழுக்களும் அமைக்கப்பட்டிருந்தன.
பள்ளிபாளையம் ஒன்றியத்துக்குள்பட்ட கோவிந்தம்பாளையத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி, குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடக்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனா். தொடா்ந்து, பிரசவித்த பெண்களுக்கு குழந்தைகள் நலப் பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்பட்டது. இதேபோல், நாமக்கல்லில் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.பி.பாஸ்கா் நகராட்சி தாய் சேய் நல விடுதியில் முகாமை தொடக்கி வைத்தாா். மாவட்டம் முழுவதும் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை பெண்கள் ஆா்வமுடன் அழைத்து வந்து போலியோ தடுப்பு சொட்டு மருந்தை வழங்க செய்தனா். இந்தப் பணியில் பொது சுகாதாரத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், சத்துணவு, பள்ளிக் கல்வித் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை, ரோட்டரி சங்கம், மகளிா் சுய உதவிக் குழுக்கள் மற்றும் தன்னாா்வலா்கள் என 5,118 பணியாளா்கள் ஈடுபட்டனா்.