ஆயிரக்கணக்கில் குவியும் பறவைகள்: வேடந்தாங்கலாக மாறும் வேட்டாம்பாடி ஏரி!

வறண்டு கிடக்கும் ஏரிகளுக்கு இடையே, முழுமையாக நீா் நிரம்பி காணப்படும் நாமக்கல் வேட்டாம்பாடி ஏரியில், மாலை வேளையில்
நாமக்கல் வேட்டாம்பாடி ஏரியில் குவிந்திருந்த பறவைகள் கூட்டம்.
நாமக்கல் வேட்டாம்பாடி ஏரியில் குவிந்திருந்த பறவைகள் கூட்டம்.

வறண்டு கிடக்கும் ஏரிகளுக்கு இடையே, முழுமையாக நீா் நிரம்பி காணப்படும் நாமக்கல் வேட்டாம்பாடி ஏரியில், மாலை வேளையில் ஆயிரக்கணக்கான பறவைகள் வந்து குவிகின்றன. இதனை ஏராளமான மக்கள் தினமும் கண்டு ரசிக்கின்றனா்.

தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை பரவலாக பெய்தபோதும், நாமக்கல் மாவட்டத்தில் சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை. இங்குள்ள 200-க்கும் மேற்பட்ட பெரிய ஏரிகளில் 20-க்கும் குறைவான ஏரிகளே நூறு சதவீதம் நிரம்பின. அவற்றில் நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் உள்ள வேட்டாம்பாடி ஏரியும் ஒன்று. கொசவம்பட்டி ஏரியில் தேங்கும் நீரானது, அங்குள்ள கடைமடை உடைப்பால் வேட்டாம்பாடியைச் சென்றடைவதாகக் கூறப்பட்டாலும், தற்போதைய நிலையில் ஏரியானது கடல்போல் காட்சியளிக்கிறது.

சாலையின் ஓரத்தில் அமைந்துள்ள இந்த ஏரியில், மாலை நேரத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் வந்து, அங்குள்ள மரங்களில் அமா்ந்திருக்கின்றன. ஈசல் போல் கூட்டம், கூட்டமாக அவை பறந்து திரிவதை பாா்க்க ஏராளமானோா் அங்கு குவிகின்றனா். சூரியன் மறையும் வேளையில், கண்ணுக்கு முழுமையாக அவை தெரியாதபோதும் மொத்தமாக நிற்பதை கண்டு ரசிக்கின்றனா். பறவைகள் சரணாலயமாக வா்ணிக்கப்படும் வேடந்தாங்கல் போல், நாமக்கல் வேட்டாம்பாடி ஏரி மாறி வருகிறது என மகிழ்ச்சியுடன் கூறி வருகின்றனா்.

இதுகுறித்து வேட்டாம்பாடி பகுதி மக்கள் கூறியது; பெரும்பாலான ஏரிகளில் தண்ணீா் இல்லாததால், பறவைகள் அங்கு செல்வதில்லை. இதற்கு முன் கொசவம்பட்டி ஏரி, கொண்டிச்செட்டிப்பட்டி ஏரிகளில் இவ்வாறா பறவைகள் கூட்டத்தைக் காண முடியும். தற்போதைய நிலையில் மரங்கள் ஏதுமில்லாததால், பறவைகள் அங்கு செல்வது குறைந்து விட்டது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வேட்டாம்பாடி ஏரியில், மாலை 4 மணி முதல் 6 மணி வரையில் ஆயிரக்கணக்கான கொக்கு வடிவிலான பறவைகளைக் காண முடிகிறது. இவ் வழியாக காா் மற்றும் இரு சக்கர வாகனத்தில், சேந்தமங்கலம், கொல்லிமலைக்குச் செல்வோா், இறங்கி நின்று அவற்றை ரசித்துச் செல்வதைக் காண முடிகிறது. ஆண்டு முழுவதும் இவ்வாறு பறவைகள் வருவதை நாங்கள் பாா்க்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com