22–ஆம் தேதி வழக்கம்போல் லாரிகள் இயங்கும்: மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தகவல்

கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள லாரித் தொழிலுக்கு சலுகைகளை வழங்க வேண்டும், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
22–ஆம் தேதி வழக்கம்போல் லாரிகள் இயங்கும்: மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தகவல்

நாமக்கல்: கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள லாரித் தொழிலுக்கு சலுகைகளை வழங்க வேண்டும், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் வரும் 22–ஆம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கும், தங்களுடைய சம்மேளனத்துக்கும் தொடர்பு இல்லை என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

 இதுகுறித்து அச்சம்மேளனத்தின் தலைவர் எம்.ஆர்.குமாரசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்–தமிழ்நாடு என்ற பெயரில் 1987–ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு கடந்த 33 ஆண்டுகளாக நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு சம்மேளனம் செயல்படுகிறது. இதன் கீழ் தமிழகம் முழுவதும் 135 கிளைச் சங்கங்கள் உள்ளன. லாரி உரிமையாளர்களுக்கு தள்ளுபடி விலையில் டீசல், உதிரிபாகங்கள் உள்ளிட்டவற்றை குறைந்த விலையில் கிடைக்க செய்வது, உரிமையாளர்களுக்கு பிரச்னை என்றால் அதனை தீர்த்து வைப்பது போன்ற செயல்பாடுகளைக் கொண்டு அவர்களின் நலனுக்காகவே இயங்கி வருகிறது.

கடந்த நான்கு மாதங்களாக கரோனா பாதிப்பால் நாடு முழுவதும் அசாதாரண சூழ்நிலை நிலவி வருவதால் பல்வேறு தொழில்கள் முடங்கிய நிலையில், சரக்கு வாகனங்களுக்கு போதிய லோடு கிடைக்காததால் லாரி உரிமையாளர்கள் வாகனங்களை இயக்க முடியாத நிலை உள்ளது.  டீசல் விலை உயர்வு, உதிரிப்பாகங்கள் விலை உயர்வு, சுங்கக் கட்டணம் உயர்வு, மூன்றாம் நபர் காப்பீடு உயர்வு, வாடகைப் பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களால் லாரித் தொழில் அழிவின் விளிம்பில் உள்ளது. 

இந்த கரோனா தொற்றினால் லாரித் தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு பலமுறை கோரிக்கை விடப்பட்டுள்ளது. இதில், தகுதிச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், தற்காலிகப் பதிவு உள்ளிட்ட சில கோரிக்கைகளுக்கு செப்.30–ஆம் தேதி வரை மத்திய அரசு கால நீட்டிப்பு வழங்கியுள்ளது. இந்த அசாதாரண சூழ்நிலையால் சரக்கு லாரிகளுக்கு போதிய லோடு கிடைக்காததால் வாகனங்களை இயக்க முடியாமல் அறிவிக்கப்படாத வேலைநிறுத்தத்தில் இருக்கும் நிலையில் வரும் 22–ஆம் தேதி லாரிகள் ஒரு நாள் வேலைநிறுத்தம் என அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.

அதற்கும் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்துக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. அன்றைய தேதியில் நமது சங்க உறுப்பினர்கள் வழக்கம்போல் தங்களது வாகனங்களை இயக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com