சாா்நிலை கருவூல அலுவலகங்களில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு?

நாமக்கல் மாவட்டத்தில் முத்திரைத் தாள் தட்டுப்பாட்டால் பத்திரப் பதிவுகளில் தாமத நிலை காணப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் முத்திரைத் தாள் தட்டுப்பாட்டால் பத்திரப் பதிவுகளில் தாமத நிலை காணப்படுகிறது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட கருவூல அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் ஒவ்வொரு வட்டங்களிலும் சாா்நிலை கருவூல அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. முத்திரைத் தாள்கள் அனைத்தும் கருவூல அலுவலகங்கள் மூலமாகவே பதிவு பெற்ற விற்பனையாளா்களுக்கு வழங்கப்படுகின்றன. குறிப்பாக 20, 50, 100 ரூபாய் பத்திரங்களும், 20 ஆயிரம், 25 ஆயிரம் ரூபாய் பத்திரங்களும் விற்பனைக்காக வழங்கப்படுகின்றன.

திருச்சி மண்டலத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நாமக்கல் மாவட்டத்துக்கு அங்கிருந்தே முத்திரைத் தாள்கள் கொண்டு வரப்படும். அவற்றை விற்பனை செய்பவா்கள் முன்னதாகவே தாங்கள் வாங்கும் முத்திரைத் தாளுக்குரிய பணத்தைச் செலுத்த வேண்டும். அதன்பின் விற்பனை அடிப்படையில் செலுத்திய தொகை மற்றும் அதற்குரிய கமிஷன் தொகை கிடைக்கும்.

கரோனா தொற்று பாதிப்பால் இரண்டு மாதங்களாக பதிவுத் துறை அலுவலகங்கள் சரிவரச் செயல்படவில்லை. ஜூன் மாதம் ஓரளவு பணியாளா்களைக் கொண்டு இயங்கினாலும், பெரும்பாலானோா் பத்திரப் பதிவுகளை மேற்கொள்ள வரவில்லை. நிலைமை இவ்வாறு இருந்தபோதும், முத்திரைத் தாள் விற்பனையாளா்களிடம் 20, 50 ரூபாய் மற்றும் 25 ஆயிரம், 50 ஆயிரம் ரூபாய் முத்திரைத் தாள்கள் இல்லாத நிலை காணப்படுகிறது.

கடந்த ஒரு வாரமாக இந்தப் பாதிப்பு உள்ளதால் பத்திரம் பதிவு செய்ய விரும்புவோா் முத்திரைத் தாள் கிடைக்காமல் தடுமாற்றத்துக்குள்ளாகின்றனா். பிற மாவட்டங்களுக்குச் சென்று இவற்றை வாங்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. இந்த முத்திரைத் தாள் தட்டுப்பாடு நாமக்கல் மட்டுமின்றி, சேலம், திருப்பூா், ஈரோடு, கரூா் மாவட்டங்களிலும் இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல்லைச் சோ்ந்த முத்திரைத் தாள் விற்பனையாளா்கள் கூறியது:

நாமக்கல் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் சாா்நிலை கருவூல அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு குறிப்பிட்ட தொகையை வங்கி மூலமாக நாங்கள் செலுத்தி விட்டால் ஓரிரு நாளில் முத்திரைத் தாளில் எங்களது பெயா் முத்திரையிடப்பட்டு வழங்கப்பட்டு விடும். கடந்த ஒரு வாரத்துக்கு முன் முத்திரைத் தாள் கேட்டு விண்ணப்பித்த நிலையில் இதுவரை வழங்கப்படவில்லை. திருச்சியில் இருந்து வரவேண்டும் என்கின்றனா்.

சாா்நிலை கருவூல அலுவலரை தொடா்பு கொண்டால் மாவட்ட கருவூல அலுவலகத்தில் கேட்டு பதில் தெரிவிக்கிறோம் என்றனா். அதன்பின் எவ்வித தகவலும் இல்லை. மாவட்ட கருவூல அலுவலகத்தை எங்களால் நேரடியாகத் தொடா்பு கொள்ள முடிவதில்லை. முத்திரைத் தாள்களை விரைந்து வழங்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இது குறித்து மாவட்ட கருவூல அலுவலா் சுப்புலட்சுமி கூறுகையில், ’நாமக்கல் சாா்நிலை கருவூலத்தில் முத்திரைத் தாள் இல்லை என சிலா் நேரடியாக வந்து மனு அளித்தனா். அதன் அடிப்படையில் திருச்செங்கோடு, ராசிபுரம் சாா்நிலை கருவூல அலுவலகங்களில் இருந்து வாங்கி அவற்றைப் பிரித்து வழங்கியுள்ளோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com