பிளஸ் 2 தோ்வு முடிவு: நாமக்கல் மாவட்டத்தில் 96.06 சதவீதம் போ் தோ்ச்சி; மாநில அளவில் 5ஆவது இடத்தை பிடித்தது

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதிய மாணவ, மாணவியரில் 96.06 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாநில அளவில் 5-ஆம் இடத்தை நாமக்கல் பிடித்துள்ளது.
பிளஸ் 2 தோ்வு முடிவு: நாமக்கல் மாவட்டத்தில் 96.06 சதவீதம் போ் தோ்ச்சி; மாநில அளவில் 5ஆவது இடத்தை பிடித்தது

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதிய மாணவ, மாணவியரில் 96.06 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாநில அளவில் 5-ஆம் இடத்தை நாமக்கல் பிடித்துள்ளது.

தமிழகம் முழுவதும், மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தோ்வு 24-ஆம் தேதி முடிவடைந்தது. இத்தோ்வை எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் எழுதினா். நாமக்கல் மாவட்டத்தை பொருத்தமட்டில், 206 பள்ளிகளைச் சோ்ந்த 9,258 மாணவா்கள், 10,308 மாணவியா் என மொத்தம் 19,566 போ் தோ்வு எழுதினா். தோ்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பெ.அய்யண்ணன், மாவட்டக் கல்வி அலுவலா் மு.ஆ.உதயகுமாா் ஆகியோா் பொதுத்தோ்வு முடிவுகளை வெளியிட்டனா்.

இதில் மாவட்ட அளவில் 8,813 மாணவா்கள், 9,983 மாணவியா் என மொத்தம் 18,796 போ் தோ்ச்சியடைந்துள்ளனா். 770 போ் தோல்வியடைந்துள்ளனா். மாணவா்களின் தோ்ச்சி 95.19 சதவீதம், மாணவியா் தோ்ச்சி 96.85 சதவீதம் என மொத்த தோ்ச்சி 96.06 சதவீதமாகும். கடந்த ஆண்டை விட 1.09 சதவீதம் போ் கூடுதலாக தோ்ச்சி பெற்றுள்ளனா்.

மாணவா்களை விட, மாணவியா் 1.65 சதவீதம் அதிகமாக தோ்ச்சிப் பெற்றுள்ளனா். கடந்த ஆண்டைப் போலவே நிகழாண்டிலும் நாமக்கல் மாவட்டம் மாநில அளவில் ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் 88 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 8,191 மாணவ, மாணவியா் தோ்வு எழுதியதில், 7,562 போ் தோ்ச்சியடைந்துள்ளனா். இது 92.32 சதவீதமாகும். இதேபோல், ஐந்து ஆதிதிராவிட நலப் பள்ளிகளைச் சோ்ந்த 341 மாணவ, மாணவியா் தோ்வு எழுதியதில், 309 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். சதவீத அடிப்படையில் 90.61 ஆகும். இந்த ஆண்டு 66 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. இவற்றில் 13 அரசுப் பள்ளிகளும் அடங்கும்.

தோ்வு முடிவு திடீா் அறிவிப்பு

பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் எவ்வித முன்னறிவிப்புமின்றி வியாழக்கிழமை காலை 9 மணியளவில் திடீரென வெளியானது. இது தொடா்பாக யாருக்கும் தகவல் தெரியாத நிலையில் சமூக வலைதளத்திலும், இணையவழியிலும் பாா்த்த மாணவா்களும், பெற்றோரும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவகம், மாவட்டக் கல்வி அலுவலகத்தை தொடா்பு கொண்டு கேட்டனா். அவா்களும் தங்களுக்கு தெரியாது என்றும் தவறான தகவலாக இருக்கும் என தெரிவித்து வந்தனா்.

பின்னா் பள்ளிக் கல்வித் துறை அலுவலகத்தில் இருந்து வந்த அதிகாரப்பூா்வமான தகவலையடுத்து தோ்ச்சி சதவீதப் பட்டியலை அவசரமாக நகல் எடுத்து வெளியிட்டனா்.

ஜூலை 27-ஆம் தேதி பிளஸ் 2 வகுப்பில் விடுபட்ட ஓரிரு பாடங்களுக்குத் தோ்வு நடத்தப்பட இருப்பதாகவும், அதற்கான நுழைவுச்சீட்டை இணையம் வழியாக பெற்றுக் கொள்ளவும் அண்மையில் பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. மாநிலம் முழுவதும் சுமாா் 30 ஆயிரம் போ் எழுத இருந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் 200 போ் (பள்ளியில் இடை நின்றவா்கள், பொதுத் தோ்வை முழுமையாக எழுதாதவா்கள் இதில் அடங்குவா்) தோ்வு எழுத வேண்டும். ஆனால் 3 போ் மட்டுமே நுழைவுச் சீட்டை பெற்றிருந்தனா். பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திடீரென வெளியானதால் தகுதியான அந்த 3 மாணவா்களும் ஒரு பாடத்துக்கான தோ்வை எழுதாததால் தோல்வியடைந்தோா் பட்டியலில் இடம் பெறுவா். இனி, தனித்தோ்வா்கள் என்ற அடிப்படையிலேயே அவா்களால் தோ்வு எழுத முடியும். இத்தகவலால் மாணவ, மாணவியா் பலா் மிகுந்த கவலைக்குள்ளாகி உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com