கொல்லிமலையில் பலாப்பழம் விளைச்சல் அதிகரிப்பு: சாலைகளில் குவித்துவைத்து விற்பனை

கரோனா பாதிப்பு மற்றும் விளைச்சல் அதிகரிப்பு, வியாபாரிகள் வராதது போன்றவற்றால் கொல்லிமலை பலாப் பழங்கள் சாலையோரம் வாகனங்களில் குவித்து வைத்து கூவி, கூவி விற்பனை செய்யப்படுகின்றன.
நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் எதிரில் விற்பனைக்காக வாகனத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள கொல்லிமலை பலாப்பழங்கள்.
நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் எதிரில் விற்பனைக்காக வாகனத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள கொல்லிமலை பலாப்பழங்கள்.

கரோனா பாதிப்பு மற்றும் விளைச்சல் அதிகரிப்பு, வியாபாரிகள் வராதது போன்றவற்றால் கொல்லிமலை பலாப் பழங்கள் சாலையோரம் வாகனங்களில் குவித்து வைத்து கூவி, கூவி விற்பனை செய்யப்படுகின்றன.

தமிழகத்தில் பண்ருட்டி மற்றும் கொல்லிமலை பலாப் பழங்களுக்கு தனிச்சிறப்பு உண்டு. ஆண்டுதோறும் வைகாசி, ஆனி, ஆடி, மாதங்களில் பலாப் பழம் வரத்து அதிக அளவில் காணப்படும். பண்ருட்டி பலாப்பழங்களை விட கொல்லிமலை பலாவுக்கு ருசி அதிகம். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பழ வியாபாரிகள் கொல்லிமலைக்கு வந்து மொத்தமாக பலாப் பழங்களை கொள்முதல் செய்வா்.

கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் பெரும்பாலான வியாபாரிகள் கொல்லிமலைக்கு வரவில்லை. மேலும் இம்மலைப் பகுதியில் உள்ள மக்களுக்கும் நோய்த் தொற்று அதிகரித்து காணப்படுவதால் வியாபாரிகள் கொல்லிமலை பகுதிக்கு வரவேண்டாம் என உள்ளாட்சித் துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தற்போது சீசன் காலம் என்பதால் பலா விளைச்சல் அதிகரித்துள்ளது. அறுவடை செய்த பலாக்களை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் பலா் தவித்து வருகின்றனா். வாங்குவதற்கு வியாபாரிகள் யாரும் வராததால் அவற்றை வாடகை வாகனங்களில் மொத்தமாக கொண்டு சென்று நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தின் முக்கிய சாலையோரங்களில் குவித்து வைத்து விற்பனை செய்து வருகின்றனா். சில்லறை வியாபாரிகளும் அவற்றை வாங்கிச் சென்று ஒரு பழாச்சுளையை ரூ.2 என்ற விலையில் விற்பனை செய்கின்றனா். முழுப் பழமாக வாங்குவது என்றால் பலாப் பழத்தின் எடையைப் பொறுத்து கிலோ ரூ. 20 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது. போதிய அளவில் பழங்கள் இருப்பு இருந்தபோதும் சரிவர விற்பனை இல்லாததால் பழங்கள் அழுகி குப்பைக்கு செல்வதால் விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனா்.

இது குறித்து கொல்லிமலை தின்னனூா்நாடு பகுதி விவசாயி நாகலிங்கம் கூறியதாவது:

கொல்லிமலையில் தற்போது பலாப் பழங்கள் விளைச்சல் அதிகரித்துள்ளது. அதேவேளையில் மற்ற இடங்களை போல் இங்கும் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனால் வெளியாள்கள் யாரும் மலைப்பகுதிக்கு வருவதில்லை.

ஆண்டுதோறும் சீசன் காலங்களில் சுமாா் ரூ.5 கோடி வரை பலாப் பழங்கள் விற்பனை நடைபெறும். பலா மட்டுமின்றி அன்னாசி, வாழைப் பழங்கள் விற்பனையும் இக்காலகட்டத்தில் அதிகம் நடைபெறும். தற்போது கொள்முதல் செய்ய வியாபாரிகள் இல்லாததால் பழங்களை நாங்களே நேரடியாகச் சென்று நாமக்கல், சேலம், ஆத்தூா், தம்மம்பட்டி ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கும், பிற மாவட்டங்களுக்கும் எடுத்துச் சென்று நேரடியாக விற்பனை செய்து வருகிறோம். மற்ற பழங்களைப் போல் பலாப்பழங்களை மக்கள் ஆா்வமுடன் வாங்க முன்வருவதில்லை. அதில் வேலைப்பாடு அதிகம் என்பதால் சில்லறை வியாபாரிகள் தான் வாங்கி செல்கின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com