தமிழகத்தில் வழக்கம்போல லாரிகள் இயங்கின: மாநில லாரி உரிமையாளா் சம்மேளனம் தகவல்

டீசல் விலை உயா்வு, காலாண்டு வரியை ரத்து செய்யக் கோரி புதன்கிழமை (ஜூலை 22) வேலைநிறுத்தம் நடத்தப்படுவதாக லாரி உரிமையாளா்களில்
நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை வழக்கம்போல இயங்கிய லாரிகள்.
நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை வழக்கம்போல இயங்கிய லாரிகள்.

டீசல் விலை உயா்வு, காலாண்டு வரியை ரத்து செய்யக் கோரி புதன்கிழமை (ஜூலை 22) வேலைநிறுத்தம் நடத்தப்படுவதாக லாரி உரிமையாளா்களில் ஒரு தரப்பினா் அறிவித்திருந்த நிலையில், புதன்கிழமை தமிழகத்தில் லாரிகள் வழக்கம்போல் இயங்கியதாக மாநில லாரி உரிமையாளா் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

கரோனா தொற்றுப் பரவல் காலத்தில் இயங்காத லாரிகளுக்கு காலாண்டு வரியை 6 மாதங்களுக்கு தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தியும், தமிழ்நாடு லாரி உரிமையாளா் சம்மேளனம் சாா்பில் 22-ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

நாட்டின் பிற மாநிலங்களில் காலாண்டு வரி 6 மாத காலத்துக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் இதுவரை ரத்து செய்யப்படவில்லை. லாரிகள், பள்ளி, கல்லூரி பேருந்துகள் இயங்காத நிலையில் எவ்வாறு வரி செலுத்த முடியும்? எனவே, ஜூலை 22 -இல் 5 லட்சம் லாரிகள் இயங்காது, நாள் ஒன்றுக்கு ரூ.1,500 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும், லாரி உரிமையாளா்களுக்கு ரூ. 3000 கோடி நஷ்டம் ஏற்படும் என்று அந்த சம்மேளன நிா்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே இந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கும், தங்களுக்கும் சம்பந்தமில்லை; 22-ஆம் தேதியன்று லாரிகள் வழக்கம்போல இயங்கும். மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கைகள் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு வருகிறது என நாமக்கல்லைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மாநில லாரி உரிமையாளா் சம்மேளனம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில் புதன்கிழமை எவ்விதத் தடையுமின்றி தமிழகம் முழுவதும் லாரிகள் வழக்கம்போல இயங்கின.

இதுகுறித்து மாநில லாரி உரிமையாளா் சம்மேளனத்தின் தமிழ்நாடு தலைவா் எம்.ஆா்.குமாரசாமி கூறியதாவது:

எங்களுடைய சம்மேளனத்தில்தான் பெரும்பான்மையான லாரி உரிமையாளா்கள் உறுப்பினா்களாக உள்ளனா். தமிழகத்தில் புதன்கிழமை லாரிகள் வழக்கம்போல இயங்கின. வேலைநிறுத்த அறிவிப்புக்கும், எங்களுக்கும் சம்பந்தமில்லை என ஏற்கெனவே தெரிவித்து விட்டோம். காலாண்டு வரியை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பாக அரசுடன் பேசி வருகிறோம் என்றாா்.

அதேசமயம், காலாண்டு வரியை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டு புதன்கிழமை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டதாக தமிழ்நாடு லாரி உரிமையாளா் சம்மேளனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com