
பள்ளிபாளையத்தில் கீழ்மட்டப் பாலம் திறப்பு விழாவில் பங்கேற்ற பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க. நிா்வாகிகள்.
பள்ளிபாளையம் காவேரி ஆா்.எஸ். பகுதியில் ரூ.20.15 கோடியில் கட்டப்பட்ட கீழ்மட்டப் பாலத்தை காணொலி வாயிலாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், ஓடப்பள்ளி கதவணை மின் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதால், காவிரி ஆற்றில் தண்ணீா் தடுக்கப்பட்டு தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் காவேரி ரயில் பாதையின் அடியில் சென்று வந்த பாதை தண்ணீரில் மூழ்கியது. போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் மக்கள் சிரமத்துக்குள்ளாயினா்.
இதனையடுத்து, அப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2018-இல் தொடங்கப்பட்டது. நெடுஞ்சாலைத் துறை மூலம் ரூ.20.15 கோடியில் பாலம் கட்டும் பணி தொடங்கியது. இப்பணிகள் முடிவுற்றதையடுத்து, திங்கள்கிழமையன்று காணொலிக் காட்சி மூலம் தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில், மின்சாரத் துறை அமைச்சா் பி.தங்கமணி மற்றும் அமைச்சா்கள் பலா் கலந்துகொண்டனா். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இதில், பள்ளிபாளையம் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் செந்தில், ஒன்றியக்குழுத் தலைவா் தனலட்சுமி, முன்னாள் நகா்மன்றத் தலைவா் வெள்ளியங்கிரி, மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் சுப்பிரமணி மற்றும் கட்சி நிா்வாகிகள், அரசுத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.