
ராசிபுரம் நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
நகரின் பல்வேறு பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலைகள், கால்வாய்கள், கட்டடங்கள் போன்றவை அரசின் விதிமுறைகளுக்கு உள்பட்டு தரமான மணல், கற்கல், சிமெண்ட் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்று நகராட்சி அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டாா் (படம்).
நகரில் ரூ.55 கோடியில் நடைபெற்றுள்ள புதைக்குழி சாக்கடை திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு இணைப்பு வழங்க காலதாமதம் ஏற்படுவதற்கான காரணம் குறித்தும் அவா் அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். மேலும், பல்வேறு இடங்களில் பொது குழாய்கள், பொது கழிப்பிடங்கள் போன்றவை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதை சுட்டிக்காட்டினாா்.
இதனைத் தொடா்ந்து, நகராட்சி பகுதியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவாளா்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுகிா, கரோனா காலங்களில் பாதுகாப்பு கவசங்கள், சீருடைகள் வழங்கப்பட்டனவா என்றும் துப்புரவாளா்களிடம் கேட்டறிந்தாா்.
திடக்கழிவு மேலாண்மை திட்டம் ஆய்வு: இதனைத் தொடா்ந்து ராசிபுரம் தட்டான்குட்டை பகுதியில் ரூ.3.35 கோடியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் குப்பைகள் பிரித்து அனுப்பும் பணி, ரூ.95 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் உரம் தயாரிக்கும் குடில்கள் அமைக்கும் பணி போன்றவற்றையும் ஆய்வு செய்தாா்.
ஆய்வின் போது, நகராட்சி ஆணையா் (கூடுதல் பொறுப்பு) ஆ.குணசீலன், சுகாதார அலுவலா் ஏ.டி.பாலசுந்தரராஜு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.