கொல்லிமலையில் வெட்டுக்கிளிக் கூட்டம்!: மிளகு கொடிகள் நாசம்

கொல்லிமலையில் மிளகு கொடிகளை சேதப்படுத்தும் வெட்டுக்கிளிகளால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.  
கொல்லிமலையில் வெட்டுக்கிளிக் கூட்டம்!: மிளகு கொடிகள் நாசம்

கொல்லிமலையில் மிளகு கொடிகளை சேதப்படுத்தும் வெட்டுக்கிளிகளால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் பாலைவன வெட்டுக்கிளிகளின் அட்டகாசம் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்துள்ளது. ராஜஸ்தான்,  மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், பஞ்சாப், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் வேளாண் பயிர்களை வெட்டுக்கிளிகள் நாசப்படுத்தின. இவை பாகிஸ்தான் பகுதிகளிலிருந்து வந்த வெட்டுக்கிளிகள் என கூறப்பட்டது. பிற மாநிலங்களில் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வெட்டுக்கிளிகள், தமிழகத்திற்குள் வந்துவிடுமோ என்ற அச்சம் இங்குள்ள விவசாயிகள் இடத்திலும் உள்ளது. 

கடந்த மாதம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆங்காங்கே மரங்களிலும்,  வேளாண் பயிர்களிலும் வெட்டுக்கிளிகள் இருந்ததால் விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர். இதனைத்தொடர்ந்து அரசு முதன்மை செயலர் ககன்தீப் சிங் பேடி மற்றும் வேளாண் வல்லுநர்கள், பூச்சியியல் வல்லுநர் கள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் வெட்டுக்கிளிகளை ஆய்வு செய்தனர். அவை பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல,  தமிழகத்தில் உலாவும் வெட்டுக்கிளிகள் தான் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் மிளகு கொடிகளை வெட்டுக் கிளிகள் கூட்டம் சேதப்படுத்தி வருகின்றன. 

பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான இம்மலைப் பகுதியில் பழங்குடியின மக்கள் அதிகம் உள்ளனர். இங்கு மிளகு,, காப்பி,, ஏலக்காய், பலா,, வாழை , நெல் உள்ளிட்டவை பயிரிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொல்லிமலை வளப்பூர் நாடு, இளமாத்திப்பட்டி ஆகிய கிராமப்பகுதிகளில் மிளகு கொடிகளில் நூற்றுக்கணக்கான வெட்டுக்கிளிகள் இலைகளையும்,  காய்களையும் சேதப்படுத்தி வருகின்றன. அங்குள்ள விவசாயி செல்லதுரையின் மிளகு தோட்டத்தில் வெள்ளிக்கிழமை வெட்டுக் கிளிகள் கூட்டம் கூட்டமாக இருந்ததை கண்டு அப்பகுதியில் இருந்த தொழிலாளர்களும், பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர். 

இது குறித்து செல்லதுரை கூறியதாவது: தற்போது கொல்லிமலையில் மிளகு அறுவடை காலமாகும். கடந்த சில நாட்களாக வெட்டுக்கிளிகள் மிளகு கொடிகளை முழுவதும் தின்று வருகிறது. கொல்லிமலையில் நன்றாக மிளகு கொடி வளர 10 ஆண்டுகள் ஆகும்.இங்குள்ள  பழங்குடியின விவசாய மக்கள் மிளகு விளைச்சலை நம்பித்தான் வாழ்வை நடத்துகின்றனர். வெட்டுக்கிளிகள் கொல்லிமலை பகுதியில் உள்ள மிளகு தோட்டங்களில் பரவாமல் தடுக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை வேளாண் துறை அதிகாரிகளும், தோட்டக்கலை துறை அதிகாரிகளும் விரைந்து மேற்கொள்ள வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு  உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com