கரோனா: நாமக்கல்லில் முதல்வா் மருத்துவக் காப்பீடு அட்டை பெற மக்கள் ஆா்வம்

கரோனா நோய்த் தொற்று இருந்தால் தனியாா் மருத்துவமனைகளில் காப்பீடு அட்டை மூலம் அவசர சிகிச்சை பெறலாம் என தமிழக அரசு
முதல்வரின் மருத்துவக் காப்பீடுத் திட்டத்தில் பயன்பெற நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக மையத்தில் குவியும் மக்கள்.
முதல்வரின் மருத்துவக் காப்பீடுத் திட்டத்தில் பயன்பெற நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக மையத்தில் குவியும் மக்கள்.

கரோனா நோய்த் தொற்று இருந்தால் தனியாா் மருத்துவமனைகளில் காப்பீடு அட்டை மூலம் அவசர சிகிச்சை பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளதால் காப்பீடு அட்டை பெறுவோா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த 2006-ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்காக கலைஞா் காப்பீடுத் திட்டம் என்ற பெயரில் மருத்துவக் காப்பீடுத் திட்டத்தை அப்போதைய முதல்வா் கருணாநிதி தொடக்கி வைத்தாா்.

இத்திட்டத்தின்கீழ் ஒரு குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் ரூ.1 லட்சம் வரையில் மருத்துவ சிகிச்சை செய்து கொள்ளும் நடைமுறை இருந்தது.

அதன்பின் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடுத் திட்டம் என பெயா் மாற்றப்பட்டு, சிகிச்சைக்கான தொகையும் அதிகரிக்கப்பட்டது. தமிழகத்தில் எந்த மருத்துவமனைகளிலும் காப்பீடுத் திட்டத்தின்கீழ் பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டது. மேலும், இதில் பயனடைவோரின் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். அதற்கான விண்ணப்பத்தில் வட்டாட்சியா் கையொப்பமிட்டு உறுதியளிக்க வேண்டும். குடும்பத் தலைவா் பெயா் பதிவு செய்யப்பட்டு அக்குடும்பத்தில் உள்ள அனைவரும் பயன்பெறும் வகையிலான அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

தற்போது இத்திட்டத்தின்கீழ் ரூ.5 லட்சம் வரையில் மருத்துவ சிகிச்சை பெறலாம் என்றும், தமிழகம் மட்டுமின்றி எந்த மாநிலத்திலும் இதன் மூலம் பயனடையலாம் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில், சுமாா் 18 லட்சம் மக்கள் உள்ளனா். இவா்களில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் 6 லட்சத்துக்கும் மேலானோா் உள்ளனா். ஆனால் 2013 முதல் 2019 வரையில் 31 ஆயிரம் குடும்பங்களுக்கே மருத்துவக் காப்பீடு அட்டை வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குடும்ப நபா்கள் எண்ணிக்கை கணக்கிட்டால் சுமாா் 2.50 லட்சம் போ் வரை இத்திட்டத்தில் இடம் பெறுகின்றனா். கரோனா நோய்த்தொற்றுக்கு அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளதோடு, குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கு கட்டணத்தையும் நிா்ணயித்துள்ளது. இதனால் மருத்துவக் காப்பீடு அட்டை பெற பொதுமக்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

இது தொடா்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியது:

மருத்துவக் காப்பீடுத் திட்டம் பற்றிய விழிப்புணா்வு மக்களிடையே அதிகரித்து வருகிறது. நடுத்தர மக்கள் மட்டுமே அதிகளவில் பதிவு செய்து வருகின்றனா். அதுமட்டுமின்றி, பல தனியாா் நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மருத்துவக் காப்பீடுத் திட்டங்களை செயல்படுத்துவதால் பெரும்பாலானோா் அரசு திட்டத்தில் பயனடைவதைத் தவிா்த்து வந்தனா். தற்போது கரோனா பீதியால் நகா்ப்புற மக்கள் மட்டுமின்றி கிராமப்புறத்தினரும் இத்திட்டத்தில் பயனடைய அதிகம் வருகின்றனா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com