கரோனா தொற்று: நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில்களை மூடி ஆட்சியர், எஸ்.பி. ஆய்வு

கரோனா தீநுண்மி ெதாற்று பரவலால் நாமக்கல் நகராட்சி அலுவலகம் மூடப்பட்ட நிலையில், பாதுகாப்பு கருதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவாயில்கள் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டு
கரோனா தொற்று: நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில்களை மூடி ஆட்சியர், எஸ்.பி. ஆய்வு

நாமக்கல்: கரோனா தீநுண்மி ெதாற்று பரவலால் நாமக்கல் நகராட்சி அலுவலகம் மூடப்பட்ட நிலையில், பாதுகாப்பு கருதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவாயில்கள் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டு ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகரித்து காணப்பட்ட கரோனா தீநுண்மி தொற்று, தற்போது பிற மாவட்டங்களிலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அங்கிருந்து தங்களுடைய சொந்த ஊர்களுக்கு வருபவர்களால் இத்தொற்று வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. இதனால் ஒவ்வோர் மாவட்டத்திலும் எல்லைப் பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் 18 இடங்களில் சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

இருந்தபோதிலும் கிராமப்புறங்கள் வழியாக மாவட்டத்திற்குள் பலர் புகுந்து வருவதாக தெரியவந்துள்ளது. இதனால் நோய்த் தொற்றின் தாக்கம் சமூக பரவல் நிலையை எட்டுவதாக உள்ளது. நாமக்கல் நகராட்சியில் அலுவலக ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வரும் நிலையில் 3 மாதமாக தொற்று இல்லாத நிலையில் திங்கள்கிழமை 2 பெண்கள் உள்பட 3 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. வளையப்பட்டி, வேலகவுண்டம்பட்டி பகுதிகளில் இருந்து பேருந்தில் வந்தவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. 

அவர்கள் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நகராட்சி அலுவலகத்தைப் போல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊழியர்களை தவிர்த்து ஏராளமானோர் வருகின்றனர். இதனால் அங்கும் தொற்று பரவல் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆட்சியர் அலுவலக நுழைவாயில் பகுதியில் காவல்துறையினர் அங்கு வருவோரை விசாரித்து அதன்பின்னரே உள்ளே அனுப்புகின்றனர். இருந்தபோதிலும், மாவட்ட கருவூல அலுவலகம், ஆதிதிராவிட நல அலுவலகம் பகுதிகளில் இரண்டு அவசர கால நுழைவாயில்கள் உள்ளதால் அதன் வழியாக சிலர் ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து விடுகின்றனர். 

இதனை தவிர்க்க அந்த நுழைவாயில் கதவுகள் மூடப்பட்டு பூட்டு போடப்பட்டுள்ளன. வெளிநபர்கள் அனைவரையும் முழுமையான விசாரணைக்கு பிறகே சம்மந்தப்பட்ட அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அதிகாரிகள், காவல்துறையினருக்கு அறிவுறுத்தினர். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பிரதான நுழைவாயில் பகுதியில் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ், காவல் கண்காணிப்பாளர் அருளரசு ஆகியோர் ஆட்சியர் அலுவலகத்துக்கு வரும் ஒவ்வொருவரையும் விசாரித்து அனுப்பினர். 

இ-பாஸ் பெறுபவர்கள் ஆட்சியர் அலுவலகம் வர வேண்டிய தேவை இல்லை என்றும் இணையம் வழியாகவே பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் கண்டிப்பாக அடையாள அட்டையுடன் பணிக்கு வரவேண்டுமென ஆட்சியர் அறிவுறுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com