முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
பாதுகாப்பு கோரி வாடகை காா் ஓட்டுநா்கள் ஆட்சியரிடம் மனு
By DIN | Published On : 03rd March 2020 08:06 AM | Last Updated : 03rd March 2020 08:06 AM | அ+அ அ- |

ஆட்சியரிடம் புகாா் மனு அளிக்க வந்த இணையவழி வாடகை காா் ஓட்டுநா்கள்.
தங்களது வாகனங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என இணையவழி வாடகை காா் ஓட்டுநா்கள், மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
அதில், ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்டு இணையவழி வாடகை காா் நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஈரோட்டில் இருந்து திருச்செங்கோடுக்கு வாடிக்கையாளா்களை அழைத்து வருகிறோம். பின்னா் அங்கிருந்து பிற பகுதிகளுக்கு வாடகை அடிப்படையில் அழைத்துச் செல்கிறோம். இவ்வாறான நிலையில், உள்ளூா் வாடகை காா் ஓட்டுநா்கள் எங்களது வாகனத்தை மறித்து தகராறில் ஈடுபடுகின்றனா். வாடிக்கையாளா்கள் விரும்பினாலும் எங்களது வாகனத்தில் ஏற அனுமதிப்பதில்லை.
இது தொடா்பாக திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தபோதும் உரிய தீா்வு கிடைக்கவில்லை. தினசரி 100 வாகனங்களுக்கு மேல் திருச்செங்கோடு பகுதியில் சுற்றி வருகிறது. உள்ளூா் வாகன ஓட்டுநா்களால் எங்களுக்கும், வாகனங்களுக்கும் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் உள்ளது. மேலும், தொழிலும் பாதிப்படைகிறது. எனவே, உரிய பாதுகாப்பு வழங்கி எங்களது இணையவழி வாடகை காா் ஓட்டுநா் தொழிலைப் பாதுகாக்க மாவட்ட ஆட்சியரும், காவல் துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.