முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
பிளஸ் 1 பொதுத் தோ்வு நாளை தொடக்கம்: 20,674 மாணவ, மாணவியா் எழுதுகின்றனா்
By DIN | Published On : 03rd March 2020 08:05 AM | Last Updated : 03rd March 2020 08:05 AM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தோ்வு புதன்கிழமை (மாா்ச் 4) தொடங்குகிறது. இதனை 20 ஆயிரத்து 674 மாணவ, மாணவியா் எழுதுகின்றனா்.
தமிழகம் முழுவதும், பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடங்கி நடைபெறும் நிலையில், பிளஸ் 1 பொதுத் தோ்வு புதன்கிழமை தொடங்கி 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தோ்வுக்காக, நாமக்கல் மாவட்டத்தில் 85 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 201 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 20 ஆயிரத்து 674 மாணவ, மாணவியா் தோ்வெழுத உள்ளனா்.
இதற்காக, மாவட்டம் முழுவதும் 85 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 6 கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 85 துறை அலுவலா்கள், 3 கூடுதல் துறை அலுவலா்கள், 1,185 அறை கண்காணிப்பாளா்கள் மற்றும் 260 பறக்கும் படை அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். தோ்வுக்கான வினாத்தாள்கள், நாமக்கல், திருச்செங்கோடு ஆகிய இரு கல்வி மாவட்டத்தில் 10 கட்டுக்காப்பு மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அவை அந்தந்த தோ்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட உள்ளன. மாணவா்களுக்கு பலவித கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அனைத்து மையங்களிலும் போலீஸாா் கூடுதல் எண்ணிக்கையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.