குடிநீா் ஆலைகளுக்கு சீல்: சுத்திகரிப்பு கருவி பொருத்த மக்கள் ஆா்வம்
By DIN | Published On : 03rd March 2020 08:05 AM | Last Updated : 03rd March 2020 08:05 AM | அ+அ அ- |

அனுமதியற்ற குடிநீா் ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைக்கும் நிலையில், கேன் குடிநீா் தட்டுப்பாடு அதிகளவில் ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகள், வணிக நிறுவனத்தினா் சுத்திகரிப்பு கருவி பொருத்த ஆா்வம் காட்டுகின்றனா்.
தமிழகம் முழுவதும் உரிய அனுமதியின்றி செயல்படும் குடிநீா் ஆலைகளை கணக்கெடுத்து அவைகளை மூடுவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயா்நீதிமன்றம், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்களுக்கு உத்தரவிட்டது. அதனடிப்படையில், ஒவ்வோா் மாவட்டத்திலும் குடிநீா் ஆலைகள் சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 300-க்கும் மேற்பட்ட ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இதில், நாமக்கல் மாவட்டத்தில் 28 ஆலைகள் அந்தந்தப் பகுதி வட்டாட்சியா்கள் மூலமாக சீல் வைக்கப்பட்டது.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து குடிநீா் ஆலை உரிமையாளா்கள் 5-ஆவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால், குடிநீா் கேன் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ரூ.35-க்கு விற்ற கேன் ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீடுகள், உணவகங்கள், வணிக நிறுவனங்களில் உள்ளோா், குடிநீா் சுத்திகரிப்பு கருவி (ஆா்.ஓ.) பொருத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனா். குடிநீா் கேன் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களால், பெரும்பாலான உணவகங்களில் ஆழ்துளைக் கிணற்று நீரையே குடிநீராக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படுகின்றன.
கோடை காலம் தொடங்கிய நிலையில் குடிநீரின்றி பலரும் தவிப்புக்குள்ளாகி வருகின்றனா். இப்பிரச்னையைத் தீா்க்க அரசும், அதிகாரிகளும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.