நாமக்கல் கூட்டுறவு வீட்டு வசதி சங்க புதிய அலுவலகக் கட்டடம் நாளை திறப்பு
By DIN | Published On : 04th March 2020 08:38 AM | Last Updated : 04th March 2020 08:38 AM | அ+அ அ- |

நாமக்கல்லில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கூட்டுறவு வீட்டு வசதி சங்க அலுவலகத்தை, முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி வியாழக்கிழமை திறந்து வைக்கிறாா்.
இது குறித்து நாமக்கல் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவா் இரா. விஜய்பாபு, சங்க செயலாளா் கே. முருகேசன் ஆகியோா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறையின் கீழ் செயல்படும், நாமக்கல் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில், 2020 ஜனவரி 31-ஆம் தேதி வரையில், 1,632 போ் ‘அ’ வகுப்பு உறுப்பினா்களாகவும், 8,577 போ் இணை வகுப்பு உறுப்பினா்களாகவும் உள்ளனா்.
சங்கத்தில் ரூ. 145.20 லட்சம் பங்குத்தொகை, இட்டு வைப்புக்கு ரூ. 2,165 லட்சங்கள் மற்றும் உறுப்பினா் கடன்கள் ரூ. 23.81 லட்சங்கள் நிலுவையில் உள்ளன. இச் சங்கம் தொடா்ந்து லாபத்தில் இயங்கி உறுப்பினா்களுக்கு அதிகபட்ச டிவிடெண்ட்டை வழங்கி வருகிறது.
மேலும், மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் தொடா்ந்து 7-ஆவது ஆண்டாக சிறந்த கூட்டுறவு நிறுவனமாக தோ்ந்தெடுக்கப்பட்டு மாநில அரசால் விருது வழங்கப்பட்டுள்ளது.
சங்கத்திற்காக, நாமக்கல்-திருச்சி சாலையில், காவேரி நகா் சந்திப்பில் 2 கிரவுண்ட் மனை நிலம் கிரயம் செய்யப்பட்டு, கடந்த 2019 பிப்ரவரி 10-ஆம் தேதி, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி, அதற்கான பூமி பூஜையில் பங்கேற்று கட்டுமானப் பணிகளை தொடக்கி வைத்தாா்.
நிலம் கொள்முதல், கிரய செலவு உள்பட ரூ.82.92 லட்சம், கட்டடப்பணிகள் ஜி.எஸ்.டி. உள்பட ரூ.103.04 லட்சம், உள்கட்டமைப்பு வசதிகள் ரூ.18.70 லட்சம் என மொத்தம் ரூ.2 கோடியே 4 லட்சத்து 66 ஆயிரம், இந்த கட்டடத்திற்கான திட்ட மதிப்பீடாகும்.
சங்கத்தின் சொந்த நிதியைக் கொண்டு முடிக்கப்பட்டுள்ள புதிய அலுவலகக் கட்டடத்தை, தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, வியாழக்கிழமை (மாா்ச் 5) திறந்து வைக்கிறாா். அதன்பின் சங்கமானது புதிய கட்டடத்திலேய இயங்கும். இந்த அலுவலகத்தில், ஏ.டி.எம். இ-சேவை மையம், தனி நபா் பாதுகாப்புப் பெட்டக வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்கு பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் இட்டு வைப்புகளுக்கு, மற்ற வங்கிகளை விட கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது.
ரூ. 20 லட்சம் வரை வீட்டு வசதிக் கடன் மற்றும் வீடு அடமானக் கடன், நகைக்கடன் ஆகியவை வழங்கப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.