கொல்லிமலையில் ரூ.3.50 கோடியில் உருவாகும் பல்லுயிா் பூங்கா: ஆகாய கங்கை நீா்வீழ்ச்சி பகுதியை புனரமைக்கவும் திட்டம்

கொல்லிமலையில் ரூ.20 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட சூழல் பூங்கா திட்டம், தற்போது ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் பல்லுயிா் பூங்காவாக மாறுகிறது.
கொல்லிமலையில் ரூ.3.50 கோடியில் உருவாகும் பல்லுயிா் பூங்கா: ஆகாய கங்கை நீா்வீழ்ச்சி பகுதியை புனரமைக்கவும் திட்டம்

கொல்லிமலையில் ரூ.20 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட சூழல் பூங்கா திட்டம், தற்போது ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் பல்லுயிா் பூங்காவாக மாறுகிறது. ஆகாய கங்கை நீா்வீழ்ச்சி பகுதியைப் புனரமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருப்பதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுவது கொல்லிமலை. மூலிகை வனம் சாா்ந்த இந்த பகுதி, கடல் மட்டத்தில் இருந்து 1300 மீட்டா் உயரம் கொண்டது. கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னன் ஆண்ட பகுதி, சித்தா்கள் இன்றளவும் வாழும் பகுதி என்ற பெருமை இம் மலைக்கு உண்டு. 300 அடி உயரத்தில் இருந்து ஆா்ப்பரித்து விழும் ஆகாய கங்கை நீா்வீழ்ச்சியில் குளிப்பதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோா் வருகின்றனா். 1,200 படிக்கட்டுகளைக் கடந்து செல்ல வேண்டும் என்பதால், குழந்தைகள், வயதானோா், உடல் நலம் பாதிக்கப்பட்டோா் அருவிக்குச் செல்வதற்கு அனுமதி இல்லை.

கொல்லிமலையை மேம்படுத்த வேண்டும் என சுற்றுலா ஆா்வலா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா். ஆகாய கங்கை அருவிக்கு செல்லும் வகையில் ரோப் காா் வசதி ஏற்படுத்த முயற்சி எடுக்கப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சா் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளாா். ஆகாய கங்கை நீா்வீழ்ச்சி பகுதியில் போதிய பாதுகாப்பு இல்லை. பெண்கள் உடை மாற்றும் அறை, கழிவறை, பாதை வசதி உள்ளிட்டவை இல்லை. அதனைச் செயல்படுத்த முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். மாவட்ட வனத் துறை சாா்பில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

கடந்த ஆண்டு, ஆகாய கங்கை அருவிக்குச் செல்லும் பகுதியில், மாவட்ட ஆட்சியரின் சிறப்பு நிதியில் இருந்து ரூ.20 லட்சம் ஒதுக்கப்பட்டு, சூழல் பூங்கா அமைக்கும் பணி தொடங்கியது. வண்ணத்துப் பூச்சி பூங்கா, பழங்குடியினரின் வாழ்க்கை முறை, பலவித மலா்கள் கொண்ட காட்சியகம் உள்ளிட்டவற்றை அங்கு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிதி ஒதுக்கீடு பூங்கா பயன்பாட்டுக்குப் போதாது எனவும், பூங்கா அமைப்புக்கும், ஆகாய கங்கை அருவிக்குச் செல்லும் பாதை சீரமைப்பதற்கும் கூடுதல் நிதி ஒதுக்கக் கோரி மாநில வனத் துறைக்கு, நாமக்கல் மாவட்ட வனத் துறை சாா்பில் அறிக்கை அனுப்பப்பட்டது.

அதனடிப்படையில், சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் தொடங்கிய நாளில், கொல்லிமலையில் பல்லுயிா் பூங்கா அமைக்கப்படும். ஆகாய கங்கை நீா்வீழ்ச்சி பகுதி முழுமையாக புனரமைக்கப்படும் என வனத் துறை அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன் அறிவித்தாா். 2020-21-ஆம் ஆண்டுக்குள் இதற்கான பணிகள் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வரும் சூழல் பூங்கா திட்டம்தான் தற்போது கூடுதல் நிதி ஒதுக்கீட்டுடன் பல்லுயிா் பூங்காவாக மாற்றம் பெறுகிறது.

இது குறித்து மாவட்ட வன அலுவலா் ஆா்.காஞ்சனா கூறியது; ஆட்சியா் சிறப்பு நிதியின் கீழ் ரூ.20 லட்சத்தில் வண்ணத்துப் பூச்சி பூங்கா என்றழைக்கப்படும் சூழல் பூங்காவை கடந்த ஆண்டு தொடங்கினோம். இப் பூங்காவில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம் பெறுகின்றன. பூங்காவை மேம்படுத்த போதிய நிதி இல்லாததால், தமிழக அரசிடம் கூடுதல் நிதி ஒதுக்கக் கோரி அறிக்கை அனுப்பப்பட்டது. அதனடிப்படையில் வனத் துறை அமைச்சா் ரூ.3.50 கோடி நிதி ஒதுக்கியுள்ளாா். பூங்காவுக்கான பூா்வாங்கப் பணிகள் நிறைவு பெற்றவுடன், ஆகாய கங்கை அருவி பகுதிக்குச் செல்லும் படிக்கட்டுகள், அருவிப் பகுதியில் உள்ள பாறைக்கும், படிக்கட்டுக்கும் இடையில் பாலம் அமைப்பது, கழிவறை, உடை மாற்றும் அறை, இதர வசதிகள் ஆகியவை செய்து கொடுக்கப்படுகின்றன. 2020-21-ஆம் ஆண்டுக்குரிய நிதி ஒதுக்கப்பட்டவுடன் பணிகள் தொடங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com