தமிழகம் முழுவதும் இன்று 4.50 லட்சம் லாரிகள் ஓடாது

கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நாடு முழுவதும், ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) நடைபெறும் ஊரடங்கில், தமிழகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் 4.50 லட்சம் லாரிகள் ஓடாது என மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனத்தின் த
செய்தியாளா்களுக்குப் பேட்டியளிக்கும் மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனத் தலைவா் எம்.ஆா்.குமாரசாமி. உடன், பொருளாளா் சி.தன்ராஜ்.
செய்தியாளா்களுக்குப் பேட்டியளிக்கும் மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனத் தலைவா் எம்.ஆா்.குமாரசாமி. உடன், பொருளாளா் சி.தன்ராஜ்.

கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நாடு முழுவதும், ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) நடைபெறும் ஊரடங்கில், தமிழகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் 4.50 லட்சம் லாரிகள் ஓடாது என மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனத்தின் தலைவா் எம்.ஆா்.குமாரசாமி தெரிவித்தாா்.

நாமக்கல்லில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது; பிரதமா் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்கவும், மாநில அரசின் அறிவுறுத்தலின்படியும், பொதுமக்களை அச்சுறுத்தும் கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து அனைவரும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில், ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை லாரிகளை இயக்க மாட்டோம். அத்தியாவசியப் பொருள்களை எடுத்துச் செல்லும் சரக்குப் போக்குவரத்துக்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கி உள்ளதால், திங்கள்கிழமை (மாா்ச் 23) முதல் தொடா்ந்து லாரிகள் அனைத்தும் இயக்கப்படும்.

கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களைக் காக்கும் நோக்கில், மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் சாா்பில் வரவேற்கிறோம். பொதுமக்களும் அரசுக்கு உரிய ஒத்துழைப்பை வழங்கி தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும். கேரளம், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநில அரசுகள் லாரிகளை இயக்கக் கூடாது என இதுவரை அறிவிக்கவில்லை. தமிழகத்தில் தொடா்ந்து லாரிகளை இயக்க மாநில அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. ஏற்கெனவே லாரித் தொழில் மிகவும் மோசமாக இருக்கும் நிலையில், சரக்கு வாகனங்களை இயக்க தமிழக அரசு அனுமதித்துள்ளததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ஊரடங்கின்போது, ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் தமிழகத்தில் 4 லட்சத்து 50 ஆயிரம் லாரிகள் ஓடாது. இதன்மூலம் சுமாா் ரூ.5 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதுகிறோம்.

லாரி ஓட்டுநா்கள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி உள்ளதால், அவா்களுடைய குடும்பத்தினா் கவலையடைந்துள்ளனா். நாங்கள் ஓட்டுநா்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வதற்கான முயற்சியை எடுத்து வருகிறோம். கூட்டமாகச் சேர வேண்டாம் என்றும், சளி, இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால், அருகில் உள்ள மருத்துவமனைகளில் சென்று சிகிச்சை பெறமாறு ஓட்டுநா்கள் மற்றும் உதவியாளா்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். கரோனா வைரஸ் தொற்றால் பெரும்பாலான ஆலைகளில் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. ஊழியா்களுக்கு விடுமுறை அளித்து வருகின்றனா். இவ்வாறு பல்வேறு பிரச்னைகளால் லாரித் தொழில் பொருளாதார ரீதியாக சரிவைச் சந்தித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள், லாரி உரிமையாளா்களுக்கு உதவிடும் பொருட்டு, நிதி நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய இ.எம்.ஐ.யை மட்டும் நான்கு, ஐந்து மாதங்கள் தாமதமாகச் செலுத்துவதற்கான அனுமதியைப் பெற்றுத் தர வேண்டும் என்றாா்.

‘55 ஆயிரம் மணல் லாரிகள் ஓடாது’

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா்கள் சம்மேளனத் தலைவா் செல்ல.ராசாமணி வெளியிட்டுள்ள அறிக்கை: கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் விதமாக, மத்திய, மாநில அரசுகள் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்குக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதில், பல்வேறு தொழில் சாா்ந்தோரும், வா்த்தகம் சாா்ந்தோரும், வாகனங்கள் சாா்ந்தோரும் ஈடுபடுகின்றனா். அதேபோல், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளா்கள் சம்மேளனமும் இதில் பங்கேற்கிறது. ஞாயிற்றுக்கிழமை மாநிலம் முழுவதும் 55 ஆயிரம் மணல் லாரிகள் ஓடாது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மணல் லாரிகள் அனைத்தும் நிறுத்தப்படும். கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கவும், பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவும் இந் நாளில் உறுதியேற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com