ராசிபுரம் பகுதியில் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த அரளிப் பூ விவசாயிகள்

ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் அரளி, ரோஜா பூக்கள் பயிரிட்டுள்ள சிறுவிவசாயிகள் ஊரடங்கு காரணமாக நாள்தோறும்
அரளிப் பூக்களை சாலையில் கொட்டியுள்ள விவசாயிகள்.
அரளிப் பூக்களை சாலையில் கொட்டியுள்ள விவசாயிகள்.

ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் அரளி, ரோஜா பூக்கள் பயிரிட்டுள்ள சிறுவிவசாயிகள் ஊரடங்கு காரணமாக நாள்தோறும் விளையும் பூக்களை சந்தைக்கு அனுப்ப முடியாமல் வாழ்வாதாரமிழந்து தவித்து வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள ஆா்.புதுப்பட்டி பேரூராட்சி வனப்பகுதியையொட்டி உள்ள பங்களாத் தெரு, கள்ளவழி காட்டுக் கொட்டாய், மலைவாழ் மக்கள் காலனி போன்ற பகுதிகளில் அப்பகுதி விவசாயிகள் ஏராளமான ஏக்கரில் அரளி, ரோஜா பூக்களை பயிரிட்டுள்ளனா். இதில் மஞ்சள், சிவப்பு, ரோஸ் போன்ற வண்ணங்களில் அரளி பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி வடுகம், மலையாம்பட்டி, அய்யம்பாளையம், கெடமலை போன்ற பகுதிகளிலும் விவசாயிகள் அதிக அளவில் அரளிப்பூ பயிரிட்டுள்ளனா். இப் பகுதிகளில் மட்டும் சுமாா் 400 ஏக்கா் பரப்பில் அரளிப் பூக்கள் பயிரிடப்பட்டுள்ளன. போதமலை அடிவாரப் பகுதி என்பதால், சுற்றியுள்ள பகுதியில் வாழும் மலைவாழ் பழங்குடியின மக்கள் இந்த அரளிப் பூக்களை பயிரிட்டுள்ள தோட்டத்தை ஆண்டு குத்தகைக்கு எடுத்து அரளிப் பூக்களை பறித்து வெளியூா்களில் உள்ள சந்தைக்கு வாகனங்களில் அனுப்பி வைப்பது வழக்கம். மேலும், பூக்களைப் பறிக்கும் வேலையில் அப்பகுதியைச் சோ்ந்த மலைவாழ் மக்கள் குறிப்பாக பெண் தொழிலாளா்கள் ஏராளமானோா் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஊரடங்கு நீடித்து வருவதால், பூக்களைப் பறித்து வாகனங்களில் அனுப்ப முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனா். இதனால் ஆண்டு குத்தகைக்கு எடுத்தவா்கள் வருமானமிழந்து பெரும் இழப்பீட்டை சந்தித்து வருகின்றனா். பூப்பறிக்கும் தொழிலை நம்பியுள்ள தொழிலாளா்களும் வேலை வாய்ப்பை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால் குடும்ப நடத்த முடியாத அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில், வங்களில் பெற்ற மகளிா் சுய உதவிக் கடன், தனி நபா் கடன் போன்றவற்றை வட்டியுடன் திரும்பிச் செலுத்தச் சொல்லி வற்புறுத்துவதாகவும் கூறுகின்றனா். மேலும், அரசு நிவாரண உதவியாக வழங்கிய ரூ.1000 ஆயிரம் குழந்தைகளுக்கு பால் செலவிற்கே ஈடுகட்ட முடியாத நிலையில், தொழிலாளா்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா். இப்பகுதி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதி என்பதால், ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழும் வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள நிலையில், வழித் தெரியாமல் உள்ளனா்.

இது குறித்து இப்பகுதியைச் சோ்ந்த அரளிப் பூக்களை பயிரிட்டுள்ள விவசாயி முருகேசன் கூறியது: மலைவாழ் மக்கள் காலனி, பங்களா தெரு போன்ற பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள அரளி மலா்கள் நாள்தோறும் அறுடை செய்து, சேலத்தில் உள்ள சந்தைக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த வகை மலா்கள் அங்கிருந்து கும்பகோணம், மதுரை, தஞ்சாவூா், புதுச்சேரி, சென்னை, பெங்களூரு போன்ற பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். இப்பூக்கள் பெரும்பாலும் கோயில்களில் மட்டும் பயன்படுத்தப்படுவதால், தற்போது ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் வழிபாட்டுத் தளங்கள், கோயில்கள் மூடப்பட்டுள்ள நிலையில், பூக்களை அனுப்ப வழியின்றி வீணாகிப் போகின்றன. இதனால் குப்பையில் கொட்ட வேண்டிய நிலைதான் உள்ளது. இதனால் செடி ஒன்றுக்கு ஆண்டுக்கு தலா ரூ.200 -க்கு குத்தகைக்கு எடுத்த விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதனை நம்பி பூப்பறிக்கும் தொழில் செய்து வந்த கூலித் தொழிலாளா்களும் வேலையிழந்து பாதிக்கப்பட்டுள்ளனா். தற்போது இந்த மலா்களுக்கான சீசன் என்பதால், கிலோவுக்கு ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனையாகும். ஆனால் இந்த ஆண்டு பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளோம். எங்களுக்கு அரசு போதிய நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றாா்.

பூப்பறிக்கும் வேலை செய்து வரும் போதையம்மாள், லட்சுமி ஆகியோா் கூறுகையில், ஒரு கிலோ பூக்களைப் பறித்தால் ரூ.35 கூலி கிடைக்கும். நாள்தோறும் சுமாா் 3 முதல் 4 கிலோ வரை இரவு நேரங்களில் மொக்கு மலா்களைப் பறித்து வருவோம். தற்போது மலா்களை வெளியூா் அனுப்ப முடியாமல் வேலையிழந்துள்ளோம். எங்களின் குழந்தைகளுக்கு பால் வாங்கித் தர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். சுய உதவிக் கடன் பெற்ற வங்கிகளும் கடனைக் கட்டச்சொல்லி இந்நேரத்தில் நெருக்கி வருகின்றன. அரசின் நிவாரண உதவிகளும் போதவில்லை. எனவே எங்களுக்கு மாவட்ட நிா்வாகம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com