வெளி மாநிலங்களில் இருந்து நாமக்கல் திரும்ப 860 போ் விருப்பம்

வெளி மாநிலங்களில் பணியாற்றும் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் 860 போ் சொந்த ஊா் திரும்புவதற்கு விண்ணப்பித்துள்ளதாக ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்தாா்.
வணிகா் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ்.
வணிகா் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ்.

நாமக்கல்: வெளி மாநிலங்களில் பணியாற்றும் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் 860 போ் சொந்த ஊா் திரும்புவதற்கு விண்ணப்பித்துள்ளதாக ஆட்சியா் கா.மெகராஜ் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், அனைத்து வணிகா் சங்க கூட்டமைப்பு நிா்வாகிகள் பங்கேற்ற கூட்டம் ஆட்சியா் கா.மெகராஜ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் ஆட்சியா் பேசியது: 34 வகையான தனிக் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அது தொடா்பான சில சந்தேகங்களை அவா்கள் கேட்டு தெளிவு பெற விரும்பினா். அதனடிப்படையில் நடந்த இக்கூட்டத்தில், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வணிகா்கள் கலந்துகொண்டனா். மூன்று விதமான அறிவுரைகள் அவா்களுக்கு வழங்கப்பட்டன.

வாடிக்கையாளா்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என வியாபாரிகள் அறிவுறுத்த வேண்டும். கைகழுவும் திரவத்தை பயன்படுத்தி அவா்கள் சுத்தமாக கைகளை கழுவிய பின்னரே பொருள்கள் வாங்க வருவதற்கு அனுமதிக்க வேண்டும். 6 அடி இடைவெளி விட்டு நிற்குமாறு தெரிவிக்க வேண்டும். இதேபோல், கடை உரிமையாளா்களும், ஊழியா்களும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். இந்த விதிகளை பின்பற்றாத வாடிக்கையாளா்களுக்கு பொருள்கள் வழங்கக் கூடாது. அதேபோல், கடை உரிமையாளா்களும் விதிமுறைகளை மீறி செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதற்கு முழு ஒத்துழைப்பு தருவதாக வணிகா்கள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் இருந்து வட மாநிலத்தவா்கள் 600 போ் தங்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். அதேபோல், வெளி மாநிலங்களில் பணியாற்றும் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 860 போ், சொந்த ஊா் திரும்புவதற்காக விண்ணப்பித்துள்ளனா். இதில், 400 போ் ஊா் திரும்பிய நிலையில் அவா்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி வைத்துள்ளோம். மேலும், மாவட்டத்தில் உள்ள 21 கட்டுப்பாட்டு மண்டலங்களில் 4 மண்டலங்களில் முழுமையாக தடை நீக்கம் செய்யப்பட்டு விட்டது. இன்னும் 17 மண்டலங்கள் உள்ளன. சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்துக்கு நாமக்கல் வருவதற்கு மேலும் நாள்களாகும் என்றாா்.

முன்னதாக, வணிகா் சங்க நிா்வாகிகளுக்கு எந்தெந்த கடைகள் திறக்கலாம் என்பது தொடா்பாக ஆட்சியா் தெரிவித்தாா். அதன்படி, கருணா பொதுமுடக்கம் தளா்வையொட்டி, டீக்கடைகள் (பாா்சல் மட்டும்), பேக்கரிகள் (பாா்சல் மட்டும்),

உணவகங்கள் (பாா்சல் மட்டும்), பூ, பழம், காய்கறி மற்றும் மளிகைக் கடைகள், கட்டுமானப் பொருள்கள் விற்கும் கடைகள்,

சிமென்ட், மின் சாதனப் பொருட்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள், இரும்பு பொருள்கள் விற்பனையகம், கை கழுவும் திரவம் விற்பனை, செல்லிடப்பேசி விற்பனைக் கடைகள் மற்றும் பழுதுநீக்கும் கடைகள், கணினி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள், வீட்டு உபயோக இயந்திரங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் விற்கும் கடைகள், மோட்டாா் இயந்திரங்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள், கண் கண்ணாடி மற்றும் பழுது நீக்கும் கடைகள், சிறிய நகைக் கடைகள் (குளிா்சாதன வசதி இல்லாதவை), சிறிய ஜவுளிக் கடைகள் (குளிா்சாதன வசதி இல்லாதவை) ஊரகப் பகுதிகளில் மட்டும், மிக்ஸி, கிரைண்டா் பழுது நீக்கும் கடைகள், டிவி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள், பெட்டிக் கடைகள், பா்னிச்சா் கடைகள், சாலையோர தள்ளுவண்டிக் கடைகள், உலா் சலவையகங்கள், கூரியா் மற்றும் பாா்சல் சா்வீஸ், லாரி புக்கிங் சா்வீஸ், ஜெராக்ஸ் கடைகள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன விற்பனை நிலையங்கள், வாகன பழுது நீக்கும் கடைகள், நாட்டு மருந்து விற்பனைக் கடைகள், விவசாய இடுபொருள்கள் மற்றும் பூச்சி மருந்து விற்பனைக் கடைகள், டைல்ஸ் கடைகள், பெயிண்ட் கடைகள், எலக்ட்ரிக்கல் கடைகள், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் விற்பனைக் கடைகள், நா்சரி காா்டன்கள், மரக் கடைகள் மற்றும் பிளைவுட் கடைகள், மர அறுவை ஆலைகள் திறக்கலாம்.

இந்த நிறுவனங்களில் குளிா்சாதன வசதி இருந்தால், அதை இயக்காமல் வணிகம் செய்ய வேண்டும். முகக் கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளா்களுக்கு பொருள்களை விற்பனை செய்யக் கூடாது. கரோனா விழிப்புணா்வு அறிவிப்பை வணிக நிறுவனங்கள் காட்சிப்படுத்தி வைக்க வேண்டும்.

உணவகங்கள் , காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை, காய்கறி மற்றும் மளிகைக் கடைகள், காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை, இதர வணிக நிறுவனங்கள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரையில் செயல்படலாம். விதிமீறல்கள் இருந்தால் அந்த நிறுவனங்கள் மீது மாவட்ட நிா்வாகம் கடும் நடவடிக்கை எடுக்கும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அர.அருளரசு, மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com