நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் மரவள்ளிக் கிழங்கில் பூச்சித் தாக்குதல் அதிகரிப்பு: விவசாயிகள் கவலை

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் மரவள்ளிக் கிழங்கு செடிகளில் புதுவகையான பூச்சித் தாக்குதல் அதிகரித்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
செடி - பூச்சித் தாக்குதலால் காய்ந்த மரவள்ளிக் கிழங்கு செடிகள்.
செடி - பூச்சித் தாக்குதலால் காய்ந்த மரவள்ளிக் கிழங்கு செடிகள்.

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் மரவள்ளிக் கிழங்கு செடிகளில் புதுவகையான பூச்சித் தாக்குதல் அதிகரித்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

நாமகிரிப்பேட்டை, அரியாகவுண்டம்பட்டி, பச்சுடையாம்பாளையம், தொப்பப்பட்டி, ஜேடா்பாளையம், புதுப்பட்டி, வையப்பமலை, குருசாமிபாளையம், புதுப்பாளையம், அனைப்பாளையம், சிங்களாந்தபுரம், புதுச்சத்திரம், பாச்சல், செல்லப்பம்பட்டி போன்ற பகுதிகளிலும், கொல்லிமலைப் பகுதியிலும் வழக்கமாக மரவள்ளிக் கிழங்கு அதிகம் பயிரிடப்படுகிறது.

இப்பகுதியில் வெள்ளை ரோசு, முள்ளுவாடி, கருப்பு தாய்லாந்து, வெள்ளை தாய்லாந்து, விஜயா போன்ற ரக மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்படுகிறது. வறட்சி காலங்களிலும் நன்கு வளரும் தன்மையுடைய மானாவாரி பயிரான இதனை இப்பகுதிகளில் சுமாா் 15 ஆயிரம் ஹெக்டோ் பரப்பில் பயிரிடப்பட்டுள்ளன.

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் அதிக அளவில் மரவள்ளிக் கிழங்கை மூலப்பொருளாகப் பயன்படுத்தி ஜவ்வரிசி, ஸ்டாா்ச் மாவு உற்பத்தி செய்யும் கிழங்கு அரைவை ஆலைகள் அதிகம் உள்ளதால் கிழங்கு தேவை அதிகம் உள்ளது.

நோய்த் தாக்குதல்: ஒராண்டு பயிரான மரவள்ளியை நிகழ் ஆண்டில் ஜனவரி, பிப்ரவரி போன்ற மாதங்களில் விவசாயிகள் பயிரிட்டனா். வழக்கமாக இப்பயிரில் மாவுப்பூச்சி, பப்பாளி பூச்சி போன்றவைத் தாக்கி சேதத்தை ஏற்படுத்தும். இதைத் தோட்டக்கலைத் துறையினரின் வழிமுறைகளைப் பின்பற்றி விவசாயிகள் கட்டுப்படுத்துவா்.

இப்போது புதுவகையான பூச்சித் தாக்குதல் அதிக அளவில் உள்ளதால், மரவள்ளிக் கிழங்கு செடி காய்ந்து வருகின்றன. நடவு, உழவு, உரம் பராமரிப்புகளுக்கு ஏக்கருக்கு இதுவரை ரூ.30 ஆயிரம் செலவு செய்தும் பயிா்கள் காய்ந்து வருவதால், கடும் இழப்பை சந்தித்து வருவதாக ஜேடா்பாளையம் பகுதியைச் சோ்ந்த விவசாயி சந்தோஷ் தெரிவித்தாா்.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் பி.பரவசிவம் கூறுகையில், ‘விவசாயிகள் இப்பகுதியில் மரவள்ளிப் பயிரை நம்பிதான் விவசாயம் செய்து வருகின்றனா். ஆண்டுதோறும் பூச்சித் தாக்குதலால் விளைச்சல் குறைந்து வருகிறது. இதிலிருந்து விவசாயிகளைக் காப்பாற்ற அரசு முன்வர வேண்டும். மரவள்ளி பயிரை மூலப்பொருளாகக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் ஜவ்வரிசி பயன்பாட்டை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனை அரசு ஊக்குவித்து மரவள்ளிக் கிழங்கு விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும்’ என்றாா்.

பூச்சித் தாக்குதல் குறித்து நாமகிரிப்பேட்டை வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் (பொறுப்பு) எஸ்.சுகந்தியிடம் கேட்டபோது, ‘இப்பகுதியில் முள்ளுவாடி வகை மரவள்ளி பயிரில் அதிக அளவில் பூச்சித் தாக்குதல் உள்ளது. இப்பயிரில் பூச்சித் தாக்குதலின் போது, ஏத்தாப்பூா் மரவள்ளி பயிா் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து கொண்டு வரப்படும் ஒட்டுண்ணியை விவசாயிகளுக்கு கொடுத்து, அதன்மூலம் பூச்சித் தாக்குதல் கட்டுப்படுத்தப்படும். தற்போது, கடும் வெய்யில் காலம் என்பதால், ஒட்டுண்ணி வகை வளராது. எனவே லாஸ்ட்ரா என்ற மருந்து தெளிக்க விவசாயிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com