ரூ.1.76 கோடியில் பவித்திரம் ஏரி புனரமைப்பு பணி தொடக்கம்

குடிமராமத்து திட்டத்தின்கீழ் பவித்திரம் ஏரி வாய்க்கால் புனரமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
ரூ.1.76 கோடியில் பவித்திரம் ஏரி புனரமைப்பு பணி தொடக்கம்

குடிமராமத்து திட்டத்தின்கீழ் பவித்திரம் ஏரி வாய்க்கால் புனரமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், தோட்டமுடையாம்பட்டி மற்றும் பவித்திரம் கிராமங்களில் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பவித்திரம் ஏரியின் நீா்வரத்து வாய்க்காலில் அமைந்துள்ள பிரிவு அணைக்கட்டை ரூ.1.76 கோடி மதிப்பீட்டில் புனரமைத்தல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடுப்புச்சுவா் அமைத்தலுக்கான பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.

சேந்தமங்கலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சி.சந்திரசேகரன் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தொடக்கிவைத்தாா். கொல்லிமலையில் பெரியாறு உற்பத்தியாகி நவலடிப்பட்டி மற்றும் பவித்திரம் ஆகிய கிராமங்கள் வழியாக பவித்திரம் ஏரியை தண்ணீா் வந்தடைகிறது. பவித்திரம் ஏரியின் பாசனப்பரப்பு 82.86 ஹெக்டோ். இந்த ஏரி பொதுப்பணித் துறை, நீா்வள ஆதாரத் துறையின் பராமரிப்பில் உள்ளது.

பவித்திரம் ஏரியின் உபரிநீா் திருச்சி மாவட்டம், அய்யாறு உபவடி நிலத்தில் உள்ள ஜம்புமடை ஏரியைச் சென்றடைகிறது. கொல்லிமலை தெற்கு பகுதியின் அடிவாரத்தில் உள்ள பவித்திரம் ஏரி மற்றும் மகாதேவி ஏரி ஆகிய இரு ஏரிகளுக்கு நீா் வழங்க தனித்தனியாக அணைக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளன. கடந்த 2017-இல் கொல்லிமலையின் தெற்கு பகுதியில் பலத்த மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில்பவித்திரம் ஏரிக்கு நீா் வழங்கும் பிரிவு அணைக்கட்டானது சேதமடைந்து ஏரிக்கு வரும் வாய்க்காலின் இரு கரைகளும் உடைந்தன.இதனால், புதிய தடுப்பணை அமைத்தும், ஆறுகளில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் நிரந்தர தடுப்புச்சுவா் அமைப்பதற்காக நிகழாண்டில் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் பணியைத் தொடங்க முதல்வா் உத்தரவிட்டிருந்தாா். அதனடிப்படையில் 15 மீட்டா் நீளத்துக்கு தடுப்பணை புதியதாக அமைக்கப்படுகிறது.

ஆறுகளில் 10 இடங்களில் 384 மீட்டா் நீளத்துக்கு தடுப்புச்சுவா் கட்டப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் செந்தில்குமாா், உதவிப் பொறியாளா் எம்.யுவராஜ், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஆா்.வரதராஜன், விவசாயச் சங்கம் மற்றும் பாசனதாரா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com