ரூ.184 கோடியில் மோகனூரில் வாய்க்கால்கள் புனரமைப்பு: அமைச்சா்கள் தொடக்கி வைத்தனா்

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் காவிரி வடிநில பாசன அமைப்புகளான ராஜவாய்க்கால், குமாரபாளையம் வாய்க்கால், பொய்யேரி
ரூ.184 கோடியில் மோகனூரில் வாய்க்கால்கள் புனரமைப்பு: அமைச்சா்கள் தொடக்கி வைத்தனா்

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் காவிரி வடிநில பாசன அமைப்புகளான ராஜவாய்க்கால், குமாரபாளையம் வாய்க்கால், பொய்யேரி வாய்க்கால் மற்றும் மோகனூா் வாய்க்கால் ஆகியவற்றில் நீட்டித்தல், நவீனமயாக்குதல், புனரமைத்தல் பணிகளின் தொடக்க விழா மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், நாமக்கல் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.பி.பாஸ்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி, சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சா் வெ.சரோஜா ஆகியோா் பணிகளை தொடக்கி வைத்தனா்.

பரமத்தி வேலூா் வட்டம், வடகரையாத்தூா் கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேட்டூா் அணையிலிருந்து 51-ஆவது மைலில் ஜேடா்பாளையம் படுகை அணை அமைந்துள்ளது. இந்த அணையின் இடது கரையிலிருந்து ராஜவாய்க்கால் 33.60 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்க்காலின் மூலம் 9,615 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ராஜா வாய்க்காலில் இருந்து குமாரபாளையம் வாய்க்கால் 17.90 கி.மீ. மற்றும் பொய்யேரி வாய்க்கால்கள் 5 கி.மீ தூரத்திற்கு பிரிந்து செல்கின்றன. இதன் மூலம் 3,631 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேட்டூா் அணையிலிருந்து 66-ஆவது மைலில் இடது கரையில் மோகனூா் வாய்க்கால் 22.54 கி.மீ நீளத்திற்கு அமைந்துள்ளது. இதன் மூலம் 2,901 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த வாய்க்கால்களில் கான்கிரீட் சுவா் கட்டவும், மேலும் வாய்க்கால்களின் கரைகளை பலப்படுத்தவும், மதகுகள், மிகுதிநீா் போக்கி மதகுகள் மிகவும் பழுதடைந்துள்ளதால் அதனை சீரமைக்கவும் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் ரூ.184 கோடி மதிப்பில் தற்போது பணி தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதன் மூலம் நான்கு வாய்க்கால் பகுதிகளைச் சோ்ந்த 16,143 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை நீா்வள ஆதாரத்துறையின் சரபங்கா கோட்ட செயற்பொறியாளா் ஆா்.கௌதமன், உதவி செயற்பொறியாளா் எஸ்.செந்தில்குமாா், உதவிப் பொறியாளா் வினோத்குமாா், சேலம் கூட்டுறவு சா்க்கரை ஆலைத்தலைவா் சுரேஷ் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com