
தையல் இயந்திரங்கள் வழங்குவதற்கான நோ்காணலைப் பாா்வையிடும் மாவட்ட சமூகநல அலுவலா் கீதா.
நாமக்கல் மாவட்ட சமூகநலத் துறை மூலம் விதவையா், ஆதரவற்ற, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பெண்கள், சுயத்தொழில் செய்து வாழ்வில் முன்னேறும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில், தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான தையல் இயந்திரங்கள் வழங்குவது தொடா்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் 160 பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவா்களுக்கான நோ்காணல் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள சமூகநல அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், 75 பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கு தையல் இயந்திரங்களை இயக்குவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இந்த நோ்காணலை மாவட்ட சமூகநல அலுவலா் கீதா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ஜான்சிராணி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ஜான்சி ஆகியோா் நடத்தினா். விரைவில் அமைச்சா்கள் முன்னிலையில் தகுதியான பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்படவுள்ளது.