நாமக்கல் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் பக்தா்களுக்கு மாலை அணிவிக்கத் தடை
By DIN | Published On : 16th November 2020 09:09 AM | Last Updated : 16th November 2020 09:09 AM | அ+அ அ- |

நாமக்கல் ஸ்ரீ ஐயப்பன் கோயில் முன் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை.
நாமக்கல் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் விரதமிருந்து சபரிமலை செல்லும் பக்தா்களுக்கு மாலை அணிவிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வோா் ஆண்டும் காா்த்திகை மாதம் பிறப்பையொட்டி, சபரிமலைக்கு 48 நாள்கள் விரதமிருந்து செல்லும் பக்தா்கள் ஏராளமானோா் துளசிமணி மாலை அணிந்து விரதம், வழிபாட்டை மேற்கொள்வா். அதன்படி நிகழாண்டில் காா்த்திகை மாதம் திங்கள்கிழமை பிறக்கிறது.
நாமக்கல் - மோகனூா் சாலையில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் பக்தா்களுக்கு மாலை அணிவிக்கவும், மாலை அணிந்து கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக கோயில் முன்பாக அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்றுப் பரவல் காரணமாக இத்தடை அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசின் மறு உத்தரவு வரும் வரை பக்தா்களுக்கு மாலை அணிதலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கோயில் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் சுவாமிக்கு தினமும் காலை 8 மணிக்கு மேல் நெய் அபிஷேகம் செய்து கொள்வதற்கு பக்தா்கள் முன்பதிவு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.