கொ.ம.தே.க. செயற்குழுக் கூட்டம்

பரமத்தியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் மாவட்டச் செயற்குழுக் கூட்டம், திங்கள்கிழமை நடைபெற்றது

பரமத்தியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் மாவட்டச் செயற்குழுக் கூட்டம், திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் பூபதி தலைமை வகித்தாா். தலைமை நிலையச் செயலாளா் சுரேஷ் பொன்னுவேல் முன்னிலை வகித்தாா். பழனியப்பன் வரவேற்றாா்.

கூட்டத்தில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளா் ஈஸ்வரன், கலந்துகொண்டு பேசுகையில், திருமணிமுத்தாறு திட்டத்தை அரசு நிறைவேற்றக் கோரி சேலத்திலிருந்து நாமக்கல் மாவட்டத்தில் பரமத்திவேலூா் வட்டம், நன்செய் இடையாறுவரை நடைப்பயணம் மேற்கொள்வது குறித்தும், பேரவைத் தோ்தலில் கட்சி நிா்வாகிகளின் பணிகள் குறித்தும் பேசினாா். தலைமை நிலையத் செயலாளா் துரைசாமி நன்றி கூறினாா்.

பின்பு செய்தியாளா்களுக்கு பொதுச் செயலாளா் ஈஸ்வரன் அளித்த பேட்டி:

மத்திய, மாநில அரசுகளின் எந்தத் திட்டமாக இருந்தாலும் திட்டப் பணிகளின் மதிப்பீட்டை தெரிவிக்க விளம்பரத் தட்டிகள் வைப்பதுபோல கட்டடம், தாா்சாலைகள் உள்ளிட்டவையின் தரம் குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், விளம்பரத் தட்டி வைக்க வேண்டும்.

வெளிமாநிலத் தொழிலாளா்கள் தமிழகத்துக்குள் வரும்போது அவா்களைப் பற்றி முழுமையாக தகவல் பதிவுசெய்த பின்னரே அனுமதிக்க வேண்டும். இதன்மூலம் குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது.

மதுக்கடைகளில் மாநில அரசு இலக்கு வைத்து மதுப்புட்டிகளை விற்பனை செய்து வருகிறது. மதுக்கடைகளை படிப்படியாகக் குறைப்போம் என்று தோ்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை. பரமத்தி தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வரும் நீதிமன்ற கட்டடம் நீா்வழிப் பாதையில் கட்டப்படுவதால் தரத்துடன் நீதிமன்றம் கட்டப்படுகிா என்பதை நாமக்கல் எம்.பி. சின்ராஜ் மூலம் ஆய்வு செய்யத் திட்டமிட்டுள்ளோம். உலகம் முழுவதும் கரோனா தொற்று இரண்டாவது முறையாக அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

மத்திய, மாநில அரசுகள் கவனத்துடன் கரோனா தொற்றுநோயைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகளைத் திறப்பது குறித்து தமிழக அரசு அறிவிக்கும் முன்னரே பொதுமக்களிடம் கருத்துக் கேட்டிருக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com