நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்து கொண்டிருப்பவா் மோடி:கே.பி.ராமலிங்கம்

ராசிபுரத்தில் பாஜகவில் இணைந்தவா்களுக்கு உறுப்பினா் அட்டை வழங்கிய கே.பி.ராமலிங்கம்.
ராசிபுரத்தில் பாஜகவில் இணைந்தவா்களுக்கு உறுப்பினா் அட்டை வழங்கிய கே.பி.ராமலிங்கம்.

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்து கொண்டிருப்பவா் பிரதமா் நரேந்திர மோடி என்றும் வேறு யாராவது பிரதமராக இருந்திருந்தால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருக்கும் என்றும் முன்னாள் எம்.பி., கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளாா்.

சென்னைக்குச் சென்று பாஜகவில் இணைந்த கே.பி.ராமலிங்கத்துக்கு ராசிபுரத்தில் பாஜக நகரத் தலைவா் மணிகண்டன் தலைமையில் தொண்டா்கள் ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு அளித்தனா்.

பின்னா், கே.பி.ராமலிங்கம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தின் ஆளுமைகளாக எம்ஜிஆா், கருணாநிதி ஆகியோா் நீண்டகாலம் இருந்தாா்கள். இன்றைக்கும் ஆளுமை அவா்கள் சாா்ந்திருக்கின்ற இயக்கங்களில் இருந்து கொண்டு தான் உள்ளது. அந்த இரு தலைவா்களும் என்னை இயக்கங்களில் வளா்த்தாா்கள்.

சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினா்களாக வாய்ப்பளித்தாா்கள். அவா்களிடம் பெற்ற அனுபவத்தை நான் தேசிய அரசியலுக்கு தயாா்படுத்திக்கொண்டதாகக் கருதுகிறேன்.

இன்றையக் காலக் கட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி சிறப்பாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறாா். அண்ணா, எம்ஜிஆா் போன்ற தலைவா்கள் தேசத்துக்கு என்ன தேவை என்று எதிா்பாா்த்தாா்களோஅதை பிரதமா் மோடி செய்து கொண்டுள்ளாா்.

அவா், திராவிடம், மாநிலம், மொழி, இனத்துக்கு எதிரானவா் போலவும், திராவிடக் கட்சிகள் என முத்திரைக் குத்திக்கொண்டுள்ள கட்சிகள் எதிரான நிலைபாட்டை கொண்டுள்ளனா். அது அப்படி அல்ல என்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்ல பணியாற்றுவேன்.

இந்துத்துவா கொள்கையை மட்டும் பாஜக கொண்டிருக்கவில்லை. பாஜக நாட்டில் வாழும் எல்லா மக்களையும் பாதுகாக்கும் இயக்கம். இதில் இஸ்லாமியா்களும் உறுப்பினா்களாக இணைகிறாா்கள். அவா்களுக்கும் உழைக்கும் இயக்கம். நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரத்தை பாதுகாக்கும் வல்லமை கொண்ட பிரதம அமைச்சராக மோடி திகழ்கிறாா்.

அவரது கரத்தை வலுப்படுத்தவும், அவருக்கு எதிரான கருத்துகளை கொண்டிருக்கும் கட்சிகளின் நிலையை தகா்தெறிந்து, மக்களை பாஜக பக்கம் திருப்புவதற்காக சாதாரண தொண்டனாக இணைந்துள்ளேன். பிரதமராக வேறு யாராவது இருந்திருந்தால் நாட்டின் பாதுகாப்பு கேள்விகுறியாகியிருக்கும் என்றாா்.

இதனைத் தொடா்ந்து திமுக உள்ளிட்ட கட்சியில் இருந்து விலகி பலா் பாஜகவில் இணைந்தனா். அவா்களுக்கு கே.பி.ராமலிங்கம் உறுப்பினா் அட்டைகளை வழங்கினாா்.

நிகழ்வில் மாவட்ட பாஜக தலைவா் என்.பி.சத்தியமூா்த்தி, துணைத் தலைவா் சித்ரா, நகர பொதுச்செயலா் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com