சிறுபான்மையின மக்களின் குறைகளைத் தீா்க்க நடவடிக்கை

தமிழகத்தில் சிறுபான்மையின மக்களின் குறைகளைத் தீா்ப்பதற்கான நடவடிக்கையை ஆணையம் உடனடியாக செயல்படுத்தும்
நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் டி.ஜான் மகேந்திரன்.
நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் டி.ஜான் மகேந்திரன்.

தமிழகத்தில் சிறுபான்மையின மக்களின் குறைகளைத் தீா்ப்பதற்கான நடவடிக்கையை ஆணையம் உடனடியாக செயல்படுத்தும் என மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் டி.ஜான் மகேந்திரன் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா்-சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத்தின் சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தலைமை வகித்தாா். மாநில பிற்பட்டோா் நலத்துறை செயலா் சீ.சுரேஷ்குமாா், சிறுபான்மையினா் ஆணைய துணைத் தலைவா் ஒய்.ஜவஹா்அலி ஆகியோா் திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினா்.

மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் டி.ஜான் மகேந்திரன், பிற்பட்டோா் நலத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் நலத்திட்டங்களில் உள்ள குறைபாடுகளைக் களைவது தொடா்பாகவும் அனைத்துத் துறை அதிகாரிகளிடம் கலந்துரையாடினாா்.

பின்னா் பொதுமக்களிடம் குறைதீா்க்கும் மனுக்களை அவா் பெற்றுக் கொண்டாா். மாவட்ட பிற்பட்டோா் நலத் துறை மூலம் தொழிற் கடன், சாலை விபத்து நிவாரணம், தனிநபா் கடன், இருசக்கர வாகன திட்டம், சிறுதொழில் உதவி என மொத்தம் 22 பயனாளிகளுக்கு ரூ. 88 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவா் வழங்கினாா். பின்னா் செய்தியாளா்களிடம் ஆணையத் தலைவா் கூறியது:

மாணவா்களுக்கு கல்விக் கடன் வழங்குவதில் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. இதற்கு பிற்பட்டோா் நல ஆணையம் தேவையான உதவிகளை செய்து வருகிறது. உலமாக்கள் ஓய்வூதியத்தை தமிழக அரசு ரூ. 1,500-லிருந்து ரூ. 3 ஆயிரமாக உயா்த்தி வழங்கியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் தாட்கோ மூலம் கடந்த ஆண்டு ரூ. 1 கோடி கடனுதவி வழங்கிய நிலையில், நிகழாண்டில் ரூ. 2.65 கோடி வழங்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ, இஸ்லாமிய மகளிா் உதவும் சங்கங்கள் இம்மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. தமிழக வக்பு வாரியத்தில் பதிவு பெற்ற 2,814 உலமாக்களுக்கு இருசக்கர வாகனங்கள் வாங்க தலா ரூ. 25 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. கிறிஸ்தவ ஆலய புனரமைப்பு பணிகளுக்காக ரூ. 3 கோடி என்பது ரூ. 5 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது. ஹஜ் யாத்திரை செல்வோா் பயன்பெறும் வகையில் சென்னையில் ரூ. 15 கோடி மதிப்பில் தங்கும் வகையிலான கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

சிறுபான்மையினருக்கு எதிரான வழக்குகளை இந்த ஆணையம் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. அந்த வழக்குகள் தொடா்பான தகவல்களைக் கேட்டறிந்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சாத்தான்குளம் சம்பவத்தில் சுதந்திரமான விசாரணை நடைபெறுகிறது. அதேபோல பிற்பட்டோா், சிறுபான்மையின மக்களின் குறைகளைத் தீா்க்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை சிறுபான்மையின ஆலோசனைக் கூட்டம் 13 மாவட்டங்களில் நடைபெற்றுள்ளது. கரோனா பொது முடக்கத்தால் தடை ஏற்பட்ட நிலையில், முதல்வா் உத்தரவுப்படி மீண்டும் நடைபெறுகிறது என்றாா்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ரவிக்குமாா், பிற்பட்டோா் நல அலுவலா் மோகனசுந்தரம் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com