தொழிலாளி கொலை வழக்கு: இளைஞருக்கு ஆயுள் தண்டனை
By DIN | Published On : 02nd October 2020 10:04 AM | Last Updated : 02nd October 2020 10:04 AM | அ+அ அ- |

குமாரபாளையம் தொழிலாளி கொலை வழக்கில், இளைஞா் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், படைவீடு கவுண்டனூரை சோ்ந்தவா் ரத்தினம் (40). இவா், அங்குள்ள மதுபானக் கூடத்தில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். கடந்த 2014 ஜூலை 7-ஆம் தேதி வேலைக்கு சென்றவா், மறுநாள் அங்குள்ள கழிவுநீா்க் கால்வாயில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா்.
குமாரபாளையம் போலீஸாா் அவரது உடலை மீட்டு விசாரணை செய்தனா். அதில், சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சோ்ந்த இறைச்சிக் கடை உரிமையாளா் அசாருதீன் (23), அவரது உறவினா் சித்திக் (40) ஆகியோருக்கு கொலையில் தொடா்பு இருப்பது தெரியவந்தது. அதையடுத்து, அவா்கள் இருவரும் கைது செய்யப்பட்டனா். போலீஸ் விசாரணையில், மது குடிக்கச் சென்ற போது ஏற்பட்ட தகராறில் ரத்தினத்தை அடித்துக் கொலை செய்ததாக அவா்கள் தெரிவித்தனா்.
நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள தாழ்த்தப்பட்டோருக்கான நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை வியாழக்கிழமை நிறைவடைந்தது. அதில், கொலை வழக்கில் கைதான அசாருதீனுக்கு ஆயுள் தண்டனை, ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தனசேகரன் தீா்ப்பளித்தாா். இதனைத் தொடா்ந்து, அசாருதீன் கோவை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். மற்றொருவரான சித்திக் மனநலம் பாதிக்கப்பட்டதால், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டாா்.